பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குன்னு சொல்றாரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்!

தேர்தல் செலவுகளுக்காக கோடிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாங்கியிருப்பது மற்ற கட்சியினருக்கு எப்படியோ, கம்யூனிஸ்ட் தொண்டனுக்கு நெஞ்சில் தீ வைத்தது போலிருக்கிறது. தொண்டர்களை உண்டியல் குலுக்கவிட்டு, இவர்கள் மட்டும் கோடிகளை வாங்கியிருக்கிறார்கள்.


இந்த விவகாரம் வெளியேவந்து நாறிப்போய்க் கிடக்கும் நிலையில், தேர்தல் கணக்குகள் தொடர்பான அவதூறுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

பதினேழாவது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கட்சி அணிகளிடமிருந்தும், மக்களிடமிருந்தும், ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி திரட்டியது. அதுபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போது தோழமை கட்சியான திமுகவும் நிதி வழங்கியது. இந்த நிதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் மூலமாக தேர்தல் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வரவு மற்றும் செலவினங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கட்சியின் அகில இந்திய மையத்திற்கு கொடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் ஒளிவு மறைவின்றி அகில இந்திய தலைமையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் வரவு-செலவு தொடர்பாக சில பத்திரிகைகளும், ஊடகங்களும், அரசியல் எதிரிகளும் வேண்டுமென்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறுகிய அரசியல் - ஆதாய நோக்குடனும் பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். இவைகள் அனைத்தும் உண்மை நிலைக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

தேர்தல் நிதி வரவு மற்றும் செலவினம் தொடர்பாக அனைத்து விபரங்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அனைவருக்கும் தெரியவரும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், இத்தகைய அவதூறுகள் பரப்புவதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது களங்கம் கற்பிப்பதை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் தெரியாமல் தி.மு.க.விடம் இருந்து பணம் வாங்குனதே தப்பு, எப்படி செலவு செஞ்சேன்னு சொல்றதுக்கு ஏன் காத்திருக்கணும்..? நோட்டை புத்தகத்தை திறந்து காட்டுங்க தோழரே, வெட்டிப் பேச்சு எதுக்கு?