மகராஷ்டிராவுல மராத்தி கட்டாயம்.. தமிழ்நாட்டுல செய்யமுடியாதா? வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கேட்கிறார்

மாநிலப் பாடமுறைப் பள்ளிகள் மட்டுமல்ல; மத்திய பாடமுறையிலான சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ, ஐஜிஎஸ்சிஇ முறையிலான பள்ளிகளிலும்கூட பத்தாம் வகுப்புவரை மராத்தி மொழிப்பாடம் கட்டாயம் என மகாராஷ்டிரத்தில் உத்தவ்தாக்கரேவின் சிவசேனா கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது;


அதைப் போல தமிழ்நாட்டில் மத்திய பாடமுறைப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி மொழி உரிமையும் மராத்திய தேசியநலனும் முன்னெடுக்கப்படுகிறது.

சிவசேனா கூட்டணி அரசின் மராத்தி மொழி அமைச்சரான சுபாஷ் தேசாய், மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் மராத்தி பயில்வது கட்டாயம் என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வரும் 24ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில், பள்ளிகளில் பத்தாம் வகுப்புவரை மராத்தி பயில்வதை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநில அரசுப் பாடமுறைப் பள்ளிகளில் மாத்திரமல்ல; மத்திய அரசுப் பாடமுறையில் இயங்கும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ, ஐஜிஎஸ்சிஇ போன்ற பள்ளிகளிலும்தான் என்பதே அமைச்சர் சுபாஷ் தேசாய் கொண்டுவரும் சட்ட மசோதாவின் சிறப்பு விடயமாகும்.

தமிழ்நாட்டில் நிலைமை என்ன? தமிழே படிக்காமல் பட்டப் படிப்பையே முடிக்க முடியும் என்ற நிலைமைதான் இருந்துவருகிறது. அதோடு தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசுப் பாடமுறைப் பள்ளிகளில் அதாவது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிஎஸ்சிஇ போன்ற பள்ளிகளில் தமிழுக்கே இடமில்லை. இந்த நிலை நிச்சயம் மாறியாக வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிஎஸ்சிஇ போன்ற மத்திய அரசுப் பாடமுறைப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். அதற்கு தமிழக அரசு வழிசெய்யவேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.