மானுஷ் ஒரு சமூக விரோதியாம்! நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி!

கடந்த மாதம் நடந்த சம்பவம் அது.சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் வேலைகளைச் செய்து செய்திகளில் அடிபட்டவர்.


இவர் போலீசாரிடம் அடிபட்ட ஒரு வழக்கில் மிகவும் பேசப்பட்டார்.கடந்த மாதம் இவர் சேலம் பிஜேபி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விவாதத்தில் இறங்கி மீண்டும் தாக்கப் பட்டார்.அஸ்தம்பட்டி போலீசார் வந்து அவரை மீட்டனர்.இந்த விவகாரம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டதும்,உணர்ச்சி வசப்பட்ட பிஜேபியினர் பெயர் குழப்பத்தால் பியூஸ் மனுசுக்கு பதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை திட்டி சமூக வலைத்தளத்தில் பதிவுகள் போட்டதும் நினைவிருக்கிறதா?.

அந்த வழக்கில் அஸ்தம் பட்டி போலீசார் பியூஸ் மனுஷ் மீது 7 பிரிவுகளிலும்,அவரைத் தாக்கிய பிஜேபியினர் மீது 3 பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சேலன் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ப்யூஸ் மனுஷ் மனுச்செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.பியூஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பாபா.மோகன் வாதிட்டார்.

மனுஷ் பொதுச்சேவைகள் செய்து வருகிறார். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கிறார். இதனால்,சிலர் அவரது மனைவி,மக்களை தவறாக சித்தரித்து பதிவுகள் இட்டு வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் கேட்கத்தான் அவர் பிஜேபி அலுவலகத்துக்குச் சென்றார்.அங்கிருந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனால்,போலீசார் பியூஸ் மனுஷ் மீது 124ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தப் பிரிவை நீக்குவதுடன் பியூஸுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டார்.இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக ஆஜரான அரசு வழக்குரைஞர் தனசேகரன்' பியூஸ் மனுஷ் சமூக ஆர்வலர் என்கிற பெயரில் அரசின் திட்டங்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார். அவர் ஒரு சமூக விரோதி.அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.நீதிபதி குமரகுரு வழக்கை ஒத்தி வைத்தார்.பியூஸ் மனுஷ் சமூக ஆர்வலரா,சமூக விரோதியா என்பதை குறித்து நீதிமன்றம் சொல்லப்போகும் தீர்ப்புக்காக சேலம் மக்கள் காத்திருக்கிறார்கள்.