என் புருசன் மணிரத்னத்துக்கு என்னாச்சு? அதிர்ச்சியில் சுஹாசினி!

சென்னை: மணிரத்னம் நலமுடன் உள்ளார் என்று அவரது மனைவி சுஹாசினி விளக்கம் அளித்துள்ளார்.


இயக்குனர் மணிரத்னம் ஞாயிறன்று உடல்நலக் கோளாறு காரணமாக, திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இதன்பேரில், பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்  வகையில் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''எனது கணவர் இன்று (ஜூன் 17) வழக்கம்போல, காலை 9.30 மணிக்கு கிளம்பி வேலைக்குச் சென்றார். நானும்,  எனது வேலையை மேற்கொண்டு வருகிறேன். எனது தோழி ஒருவர் கொடுத்த ரொட்டி, மாவடுவை ருசித்துச் சாப்பிட்டேன்.

எனது கணவர் ஸ்கிரிப்ட் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்,'' என்று சுஹாசினி குறிப்பிட்டுள்ளார். மணிரத்னத்திற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலால், அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். சமூக ஊடகங்களில் இதுபற்றி பலரும் பிரார்த்திக்கும் வகையில் பதிவு வெளியிட்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனால் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் எனவே தான் விளக்கம் அளித்ததாகவும் சுஹாசினி கூறியுள்ளார்.