ரஜினியை வம்படியாக தரகு மணியனும் தரகு குருமூர்த்தியும் அரசியலுக்கு இழுப்பது ஏன்? வன்னி அரசு அம்பலப்படுத்துகிறார்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், அவர் வந்தால் மட்டும்தான் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று திருவாளர்கள் குருமூர்த்தியும், தமிழருவிமணியனும் வேதம் ஓதி வருகிறார்கள். ஏன் அவர்கள் ரஜினியை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு.


ரஜினிகாந்தை வைத்து படங்கள் எடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஓரிரு திரைப்படங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனாலும் நடிகர் திரு.ரஜினிகாந்த் அந்த தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்த படங்களுக்கான கால்ஷீட்களை கொடுத்து நட்டத்தை ஈடு செய்திருக்கிறார். சில படங்கள் படுதோல்வியிலும் முடிந்திருக்கிறது.

மும்பையிலிருந்து நடிகைகள் வந்து நடிப்பதை போல ரஜினிகாந்தும் மும்பையிலிருந்து வந்தவர்தான். வழி என்னவோ கர்நாடகமாக இருந்தாலும் பூர்வீகம் மகராஷ்டரம் தான். ஓர் எளிய மனிதராக பேரூந்து ஓட்டுனராக தமது வாழ்க்கையை துவங்கியவர். சினிமாவில் அதுவரை அழகான, கலர்புல்லான நடிகர்கள் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

அப்போது தமிழினத்துக்கு நெருக்கமான கருப்பாக இருந்த திரு.ரஜினி அவர்கள் அறிமுகமானார். தமிழ்நாடு வண்ணங்களில் பேதம் காணுவதில்லை என்பதை உறுதிபடுத்தியது. நடித்தார். சம்பாதித்தார்.நல்ல நடிகர். பண்பாடுள்ளவர். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்.

தயாரிப்பாளர்களுக்கான லாபகரமான ‘இயந்திரன்’ என்றெல்லாம் ‘சினிமா உலகம்’அவரை கொண்டாடுகிறது. அவரால் லாபத்தை அடைந்தவர்களின் மொழி அதுவாகத்தான் இருக்க முடியும்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் நமக்கில்லை. ஆனால் அதே லாபகரமான தொழில் அரசியலுக்கு சாத்தியப்படுமா?

எப்படி சினிமா தயாரிப்பாளர்கள் பணப்பைகளோடு ரஜினியை வைத்து தொழில் செய்தார்களோ அதே போல அரசியலிலும் சில தயாரிப்பாளர்கள் இறங்கி இருக்கிறார்கள்.அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் சிலர் இந்த வேலையை முடித்து தர மும்முரமாக இறங்கி உள்ளார்கள்.

அவர்களில் முதன்மையானவர் தமிழருவிமணியன். இவர் பல நிறுவனங்களில் பணி புரிந்தவர்தான். திமுகவின் திட்டக்குழு உறுப்பினராக நல்ல ‘கொழு’‘கொழு’சம்பளத்தில் இருந்தார். ஏதோ அந்த நிறுவனத்தின் முதலாளி கலைஞருக்கும் தமிழருவி மணியனுக்கும் ‘வீட்டு பிரச்சனை’. கேட்ட வீட்டை கொடுக்கவில்லையாம்.

அவ்வளவு தான் முதலாளி கொடுத்த வீட்டை முதலாளியிடமே ஒப்படைத்து விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு முன்பு காங்கிரஸ் என்னும் அகில இந்திய நிறுவனத்தில் வேலை பார்த்தார். காமராஜர் ராஜியம் என்றெல்லாம் கூவினார். பிற்பாடு ஜனதா கட்சி என்னும் தமிழ்நாட்டு கிளையில் வேலை பார்த்தார். எதுவும் போனியாகவில்லை. 

அப்புறம் கர்நாடகாவை சார்ந்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக்சக்தி என்னும் கம்பெனியின் தமிழ்நாட்டு கிளைக்கு ஆள் வேண்டும் என்று கேள்வி பட்டவுடன், வேறு யாரும் வருவதற்கு முன்பாக இடம் பிடித்து பணி புரிந்தார். சம்பளம் கட்டுபடியாகவில்லை.

பாவம் உழைப்புக்கேற்ற ஊதியம் அங்கு இல்லை. விரக்தியின் விளிம்புக்கே போனார். இந்த நாடே நாசமாக போகிறது என்றெல்லாம் சாபமிட்டார். அப்புறம் என்னாச்சுன்னு தெரியல,

மதிமுகவின் முதலாளி வைகோவை இந்த நாட்டுக்கே ராசாவாக்க போகிறேன் என்று உரக்க கூவினார். அங்கே கூவினார், இங்கே கூவினார், எங்கெல்லாமோ கூவினார். ஆனாலும் ம.தி.மு.க.வின் முதலாளி வைகோ இந்த கூவலை கண்டு கொள்ளவில்லை. “ஏதோ நம்மை வைத்து காமெடி கீமடி பண்ணுகிறார் மணியன்’’ என்று புறந்தள்ளினார். ஆனாலும் விடாது அடுத்த கூவலை ஆரம்பித்தார் மணியன். 

“திரிஷா இல்லீன்னா அடுத்த இலக்கு நயன்தாரா’’ என்று வடிவேலு பயணிப்பதை போல 

அடுத்த முதல்வர் விஜயகாந்த் என்று கூவினார். முதலாளி விஜயகாந்த் ஒருவர் மட்டுமே சுத்த தங்கம். இந்த நாட்டை காக்க வாராது வந்த மாமணி. திராவிட கம்பெனிகளை இழுத்து மூட வந்த நல்ல கம்பெனி ‘கேப்டன் கம்பெனி’ என்றெல்லாம் கூவினார். 

இந்த ‘கேப்டன் கம்பெனி’ ஒரு நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுக்கும் என்று நம்பினார். ஆனால் தமிழருவி மணியனின் பேராசையில் பிரேமலதா என்னும் கேப்டனின் உண்மையான முதலாளி மண்ணை போட்டார். பாவம் தமிழருவி மணியனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அப்போதும் அவர் ஒரு சின்ன கம்பெனி வைத்து தான் நடத்தினார். லாபகரமாக நடத்தவில்லையென்றாலும் பெரு முதலாளிகளுக்கு அப்போதைக்கு அப்போது தரகு வேலை பார்த்து பிழைப்பை ஓட்டி வந்தார். தரகு முதலாளியாகவும் தன்னை காட்டிக்கொண்டார்.

காந்தியின் பேரால் அந்த கம்பெனியை வைத்திருந்தாலும் காந்தியை கொன்றவர்களோடு அல்லது அந்த கொலையை ஞாயப்படுத்துவோரிடம் நல்ல வணிக தொடர்பு வைத்திருந்தார். சமீபத்தில் திருச்சியில் காந்தியை கொன்ற கொலையாளிகளின் நல்லாதரவை பெற்ற ‘துக்ளக்’

கம்பெனி நடத்திய விழாவில் அதன் முதலாளி குருமூர்த்தியோடு, ‘தரகு முதலாளி’ தமிழருவி மணியன் வியாபார உத்தியோகமாக கலந்து கொண்டார். இந்த விழாவில் தரகு முதலாளி தமிழருவி மணியனுக்கு நல்ல உபசாரங்கள் நடந்தன. அதன் மூலம் தமது லாபகரமான தொழில் உறுதி செய்யப்பட்டது.

இப்போது, “என் மூச்சு முடிவதற்குள் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். திராவிட இயக்கங்கள் தமிழால் வளர்ந்த இயக்கங்களே தவிர தமிழை வளர்த்த இயக்கங்கள் அல்ல. தமிழை அழித்த இயக்கங்கள் தான் திராவிட இயக்கங்கள் என்றெல்லாம்’’ சொல்லி இருக்கிறார்.  

ரஜினிகாந்த் வந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று தமது தரகு தொழிலை செம்மையாக செய்தார். திருச்சியில் துக்ளக் முதலாளி குருமூர்த்தியும் (இவரும் ஒரு தரகு முதலாளிதான்) இன்னொரு தரகு முதலாளியின் கருத்தையே வழிமொழிந்தார்.

இப்போது இந்த நாட்டுக்கு ராஜாவாக ரஜினிகாந்தை இந்த தரகு முதலாளிகள் முன் மொழிந்து விட்டார்கள், வழிமொழிந்தும் விட்டார்கள். அதெல்லாம் இருக்கட்டும். யாருக்காக இந்த தரகு வியாபாரம்? கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்த்த ஏனைய பாளையக்காரர்களை போல 

தமிழருவி மணியனும் குருமூர்த்தி போன்றவர்களும் தீவிரமாக இறங்கி விட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் வரவிருக்கும் வடக்கிந்திய கம்பெனிகளுக்காக தரகு வேலையை பார்த்து வருகிறார்கள். அந்த வடக்கிந்திய கம்பெனியின் முதலாளிகளான இந்து சங்பரிவாரங்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல பெயரும் இல்லை.

ஒண்ட ஒரு இடமும் இல்லை. அப்படியான ஒரு சூழலில் தான் வடக்கிந்திய கம்பெனியின் இந்துத்துவ வியாபார உத்தியை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர் தான் என்பதை, வடக்கிந்திய கம்பெனியின் ‘ச்சீசிங்’பார்ட்டிகளான பொன்னார் உள்ளிட்டோர் புரிந்து கொண்டு ரஜினியை ‘ச்சீசிங்’ பண்ண முயன்றார்.

ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிகராகவே இருப்பதால் இந்த கம்பெனியில் இணைவதால் லாபம் கிடைக்குமா? நம்மை நம்பி வரும் முதலாளிகளுக்கு ஏதும் நட்டம் ஏற்படுமா என்னும் அச்சமும் ஏற்பட்டது. அந்த அச்சத்தை தான் தரகு முதலாளிகளான தமிழருவி மணியனும் துக்ளக் குருமூர்த்தியும் போக்க முயற்சிக்கின்றனர். 

தைரியமா “கால்ஷீட் கொடுத்தா 2021 ல் வடக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு இந்த சமஸ்தானத்துக்கு ராஜாவாகலாம்’’ என்று லாபகரமான ஆசையை தூண்டி விடுகின்றனர். ஆனால் இந்த தமிழ்நாடு எப்போதோ வடக்கிந்திய கும்பெனியார்களை விரட்டி அடித்த மண் என்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற மக்கள் தலைவர்கள்,

வடக்கிந்திய கம்பெனிகளை எதிர்த்து மாநில மக்களை தனித்த உரிமைகளோடும் பகுத்தறிவோடும் சமூகநீதிகொள்கையோடும் தலை நிமிரவைத்தவர்கள் என்ற வரலாற்றின் அடிப்படையில் இங்கு வடக்கிந்திய கம்பெனி நுழையவே முடியவில்லை. 

தங்களுடைய சுய லாபத்துக்காகவும் விரக்தியின் உச்சத்திலும் தமிழருவி மணியன் போன்ற தரகு முதலாளிகள் எப்படியாவது வடக்கிந்திய கம்பெனியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று ரஜினியை முன் மொழிந்து பேசி வருகிறார்கள். எப்போதுமே தரகு முதலாளிகளுக்கு தான் லாபம் கிடைக்கும். பாவம் மக்களுக்கு என்று கேள்வி எழுப்புகிறார் வன்னி அரசு.