ஆடித்திருவிழாவில் ஆண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா! - மானாமதுரை ருசிகரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவின் போது அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் மாறி மாறி மஞ்சள் தண்ணீர் ஊற்றி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.


ஆடி மாதம் ஆடித்திருவிழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 151 வது ஆண்டு  விழா பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு பூஜையாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

மாமன் மச்சான் உறவு கொண்ட பெண்கள் ஆண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றியம் , ஆண்கள் பெண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றியும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து வீட்டினுள் ஒளிந்து கொண்ட நபர்களை தேடிப் பிடித்தும் துரத்திப் பிடித்தும் மஞ்சள் நீரை ஊற்றி கொண்டாடினர். அப்பகுதிகளில் உறவுமுறை செழிக்க இந்த மாதிரியாக மஞ்சள் நீராட்டு விழா வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.