ஐதராபாத்: இறுதிச்சடங்கு நடைபெறும் நேரத்தில் உயிர் பிழைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நோய்வாய் பட்டு உயிரிழந்த இளைஞர்! குடும்பத்தினர் கூடி ஒப்பாரி வைத்த போது நிகழ்ந்த பேரதிசயம்!
தெலுங்கானா மாநிலம், சூர்யபேட்டை மாவட்டத்தில் உள்ள பில்லாலமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தம் கிரண். 18 வயதாகும் இவர், டெங்கு மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, மிகவும் கவலைக்கிடமான முறையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒருகட்டத்தில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகவும், இனி அவர் உயிர் பிழைக்க மாட்டார் எனவும் மருத்துவர்கள் கை விரிவித்துவிட்டனர். அத்துடன், சில மணிநேரம் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்பதால், உடனடியாக வீட்டிற்கு கொண்டு சென்று, இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, காந்தம் கிரணை, அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஆக்சிஜன் மாஸ்க் மட்டும் அணிந்த நிலையில், அவரை மரண படுக்கையில் கிடத்தி, இறுதிச்சடங்கிற்கு ஆக வேண்டிய வேலைகளை குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து, அனைவரும் ஒப்பாரி வைக்க தொடங்கிய நிலையில், திடீரென காந்தம் கிரண், எழுந்து உட்கார்ந்திருக்கிறார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்து, மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க, அவர் ஓடி வந்து, கிரணை பரிசோதித்து விட்டு, இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள், எனக் கூறியுள்ளார்.
பின்னர், கிரணை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்து, திரவ ஆகாரம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவன் பேச தொடங்கிவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும், அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.