சிவகங்கையில் 2! கோவையில் 1! அந்தமானில் இன்னொன்னு! 4வது மனைவிக்கு தயாராகும் கல்யாண மன்னன்!

அந்தமானில் டிரைவராக பணிபுரியும் தங்களது கணவரின் 4வது திருமணத்தை தடுத்து நிறுத்தும்படி, கோவை கமிஷனரிடம் 2 பெண்கள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக, கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசி, அந்தமானை சேர்ந்த புஷ்பலதா ஆகியோர் சனிக்கிழமையன்று, கோவை கமிஷனரிடம் புகா ஒன்றை அளித்தனர். 

இந்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு தமிழரசியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், தமிழரசி சொந்த ஊருக்கு வந்தபோது, இன்னொரு பெண்ணை கணேசன் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண் திடீரென இறந்துவிட்டார்.

இதன்பின், மீண்டும் தமிழரசியுடன் குடும்பம் நடத்தி வந்த கணேசன், இந்த விசயத்தை மறைத்து, புஷ்பலதாவை 3வதாக திருமணம் செய்துகொண்டார். இதில், ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இப்படி வரிசையாக 3 திருமணம் செய்த கணேசன், தற்போது அந்தமானில் டிரைவர் வேலை செய்கிறார்.

அங்கே மற்றொரு பெண்ணை 4வது திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனை உடனடியாக, தடுத்து நிறுத்த வேண்டும், என்று, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 

இதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் பெண்ணே கிடைக்காமல் பலர் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நிலையில், இந்த டிரைவர் கணேசனின் கதை, வியப்பூட்டுவதாக உள்ளது.