பீடா வியாபாரியின் உதட்டை கடித்து துப்பிய இளைஞன்..! காதுகளையும் கடித்து கொடூரம்! பதற வைக்கும் காரணம்!

கான்பூர்: இலவச பீடா தராத கடைக்காரரை இளைஞர் ஒருவர் கடித்து காயப்படுத்தியுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள ஆலம்பாக் என்ற இடத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு பீடா கடை நடத்தி வரும் சத்யேந்திரா என்பவரிடம் செவ்வாயன்று இரவு 10 மணியளவில், ஷாலு என்ற நபர் ஓடிவந்து பீடா கேட்டுள்ளார். இரவு 10 மணி என்பதால், கடையை மூடும் அவசரத்தில் இருந்த சத்யேந்திரா, அவரிடம் காசு கேட்டுள்ளார்.

ஆனால், காசு தர மறுத்த ஷாலு இலவசமாக பீடா தரும்படி கேட்டுள்ளார். இதற்கு சத்யேந்திரா மறுக்கவே, உடனடியாக கீழே கிடந்த கல்லை எடுத்து ஷாலு தாக்கியுள்ளார். அத்துடன் அவரை கீழே தள்ளி, வாய் மற்றும் காது உள்ளிட்ட இடங்களில் கடித்து காயப்படுத்தியுள்ளார்.  

சத்யேந்திரா வலி தாங்காமல் அலறவே, ஷாலு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற சத்யேந்திரா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். ஆலம்பாக் போலீசார் வழக்குப் பதிந்து, ஷாலுவை கைது செய்தனர். அந்த நபர் மது போதையில் இத்தகைய செயலை செய்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.