அந்தரங்கப் பகுதியில் தாக்கிய விவகாரம் - அமித்சா சமிக்ஞை இல்லாமல் நடந்திருக்காது என மக்கள் மேடை குற்றச்சாட்டு

ஊர்வலம் சென்ற பெண் மாணவர்களைக் குறிவைத்தும் அந்தரங்கப் பகுதிகளில் டெல்லி போலீசும் பல கயவாளி ஆண் மாணவர்களும் தாக்குதல் நடத்திய பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித் சாவின் சமிக்ஞை இல்லாமலிருக்க வாய்ப்பில்லை என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை குற்றம்சாட்டியுள்ளது.


அவ்வமைப்பின் செயற்பாட்டுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, கல்வியாளர் தாவூத்மியாகான், மத்தியஅரசு ஊழியர் சங்கத்தலைவர் எம். துரைப்பாண்டியன், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் ஞானகுரு உள்பட பலரும் கலந்துகொண்டனர். 

இதில், ’குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி பிப்ரவரி 26 அன்று சென்னையில் மாநாடு நடத்துவது’ என்றும் ’அதில் சிறப்பு அழைப்பாளர்களாக கேரள, புதுவை முதலமைச்சர்களை அழைப்பது’ என்றும் முடிவுசெய்யப்பட்டது. 

 நேற்று டெல்லியில் நடைபெற்ற மாணவர் பேரணியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில், “குடியுரிமை திருத்தச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்திப் போராடிவரும் தில்லி ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் பிப்ரவரி 10-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது காவல்துறையினரால் கண் மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மாணவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திரும்பிச்செல்ல வற்புறுத்தியுள்ளனர். திரும்பிச் செல்ல மாணவர்கள் மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள்மீது தடியடி நடத்த ஆணையிடப்பட்டது. அதில் அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் ஒருமாணவி, தனது மேலங்கி அகற்றப்பட்டு பிறப்புறுப்பில் தாக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இதேபோல் சில ஆண் மாணவர்களும் காவல்துறையினர் பூட்ஸ் கால்களால் தங்களது அந்தரங்கப்பகுதிகளில் மிதித்துத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். மருத்துவர்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் இந்த வன்மத்தாக்குதலில் பெண் போலீசாரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தில்லி காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமிக்கை இல்லாமல் இந்தத்தாக்குதல் நடந்திருக்காது என்பது தெளிவு.

மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளிக்காமல், ஒடுக்குமுறைகள் மூலமே தனது கொடூரச்சட்டங்களை நிறைவேற்ற முயல்கிறது பாஜக அரசு. இதனைத் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. மத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தும் சட்டத்தை எதிர்த்துப் போராட்டக் களம் கண்டுள்ள ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். 

நாட்டின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் மக்கள் ஒற்றுமைக்காகவும் செயல்பட்டு வரும் இயக்கங்கள் தில்லி காவல்துறையின் இந்த அராஜகத்துக்கு ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.