சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு! மின்னல் வேகத்தில் இளைஞரை காப்பாற்றிய கமாண்டோ!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அளித்த புகாருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மனமுடைந்த நபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தின் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


அந்த நபரை அங்கிருந்த கமாண்டோ படை வீரர் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோவானது வலைத்தளத்தில் பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில மாதத்திற்கு ஒரு நபர் புகார் ஒன்றை அளித்தார். இந்நிலையில் அவரை காவல்துறையினர் நீண்ட நாட்கள் அலைக்கழிப்பதாகவும், அந்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காத நிலையில் அந்த நபர் மனமுடைந்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினரிடம் தான் அளித்த புகார் குறித்து கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு அலட்சியமாக பதில் அளித்த நிலையில் அந்த நபர் உடனே காவல் ஆணையர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு ஏறி சென்று தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் பதறிப்போன காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருசமயம் அவர் கீழே குதித்து விட்டால் அவரை காப்பாற்றுவதற்கு முதலுதவி சிகிச்சைக்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிலையில் அவர் காவல் ஆணையத்தின் மேலே இருப்பதை பார்த்த பணியில் இருந்த கமாண்டோ படை வீரர் ஒருவர் அவர் இருக்கும் பகுதிக்கு சென்று அவருக்கே தெரியாமல் அவரை அருகில் உள்ள ஒரு சிறிய இடத்தில் தள்ளி அவரின் உயிரை காப்பாற்றி உள்ளார்.

அங்கிருந்த அனைவரும் கமாண்டோ படை வீரரை பாராட்டியுள்ளனர். பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே அந்த நபர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.