சுடச்சுட கும்பகோணம் ஐயர் சிக்கன்! மதுரையில் மதப் பிரச்சனையை உருவாக்கிய பிரபல ஓட்டல்!

மதுரையில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் அசைவ உணவுப் பட்டியலில் “கும்பகோணம் ஐயர் சிக்கன்” என ஒரு வகை உணவு இருப்பதாக இடம்பெற்றிருப்பது பிராமணர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வடக்கு மாசிவீதியில் செயல்பட்டு வரும் மிளகு என்ற உணவக உரிமையாளர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க தங்களது ஓட்டலில் “கும்பகோணம் ஐயர் சிக்கன்” என்ற விசேஷ உணவு இருப்பதாக சமூக வலைதளங்கள், இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

“கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற உணவுப் பெயர் வைரலாக பரவவே கோபம் அடைந்த பிராமணர்கள் மிளகு ஓட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுமக்களை கவர வித்தியாசமான தலைப்பு போட்ட உரிமையாளர் டுவிக் உணவுப் பட்டியல் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கவில்லை போலும்.

பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்ட உரிமையாளர் உடனடியாக உணவுப் பட்டியலில் இருந்து கும்பகோணம் ஐயர் சிக்கனை என்ற வார்த்தையை நீக்கினார். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர். சர்ச்சைக்குரிய பெயர் ஓட்டலின் பெயர் பலகையில் இடம்பெற்றிருந்தால் கூட “கும்பகோணம் ஐயர் கிச்சன்” என்ற வார்த்தையைத்தான் “கும்பகோணம் ஐயர் சிக்கன்” என தவறுதலாக எழுதிவிட்டதாக சொல்லி சமாதானப்படுத்தியிருக்கலாம் 

எது எப்படியோ கடந்த சில தினங்களாக ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்கள் அதென்ன புதுப் பெயராக உள்ளதே என கும்பகோணம் ஐயர் சிக்கனை ஆர்டர் செய்து சுவைத்துவிட்டு சென்றார்களாம். புதுவகை உணவால் கடந்த சில நாட்களாக ஓட்டலுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக வருமானம் வந்துள்ளதாக அரசல் புரசாலக பேசிக்கொண்டது எங்கள் காதுகளில் மட்டும் கேட்டது.