பேருந்துக்குள் கொட்டிய மழை! தலையில் துண்டு! அரசு பஸ் டிரைவரின் பரிதாப நிலை! வைரல் வீடியோ!

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்துகள் மிகவும் பழுதடைந்து மழைநீர் உள்ளே ஒழுகும் அளவிற்கு மோசமான நிலையில் இயங்கி வருவதாக போக்குவரத்து துறைக்கு புகார் எழுந்துள்ளது.


சோழவந்தான் பணிமனையில் இருந்து சுமார் 49 பேருந்துகள் மதுரை, வாடிப்பட்டி மற்றும் மதுரையை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் சில மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தொடர்ந்து போக்குவரத்து துறைக்கு புகார் அளிக்கப்பட்டு வந்தது. 

குறிப்பாக மழைக்காலங்களில் பேருந்திற்கு உள்ளேயே மழைநீர் வருவதால் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை என்றும் நனைந்தபடியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை வரை செல்லும் பேருந்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் மழையில் நனைந்தபடி பேருந்தை இயக்கி செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் கிண்டலுக்கும் வேதனைக்கும் உள்ளானது. 

குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு அரசு போக்குவரத்து துறை உதவி வருவதாகவும், பேருந்தில் மழைநீரை சேகரித்து வைத்து அருகில் இருக்கும் பகுதிகளுக்கு அளித்து வருவதாகவும் கிண்டல் அடித்துவருகின்றனர்.