திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக வேட்பாளராகும் மதுரை அன்பு! அஜித்தை தூக்கிச் சென்று அல்லு தெறிவிக்கவிட்டவர்!

திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு இன்று விநியோகம் செய்யப்பட்டது. மதுரையை சேர்ந்தவரும் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளரும், பிரபல விநியோகஸ்தருமான மதுரை அன்புச் செழியன் இந்த விருப்ப மனுவை வாங்கிச் சென்றார்.
மாலையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணம் நடைபெற்றது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இணைந்து இந்த நேர்காணலை நடத்தினர். அப்போது அன்புச் செழியனும் நேர்காணலில் பங்கேற்றார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான நேர்காணலில் அவர் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் அன்புச் செழியனே அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அன்புச் செழியன் மிகவும் நெருக்கமானவர் ஆவார். மேலும் செலவுக்கு குறை வைக்காதவர். இதனிடையே அன்புச் செழியன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அன்புச் செழியனிடம் கடன் வாங்கி அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டலுக்கு ஆளானதே தனது தற்கொலைக்கு காரணம் என்று அசோக் குமார் கடிதமே எழுதி வைத்தார். ஆனால் இந்த வழக்கில் அன்புச்செழியனை போலீசார் கைது கூட செய்யவில்லை.
முன்னதாக பாலாவின் நான் கடவுள் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். பிறகு அந்த படத்தில் நடிக்காமல் அஜித் விலகினார். இதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச் செழியன் நடிகர் அஜித்தை தூக்கிச் சென்று மிரட்டி கொடுத்த அட்வான்சை அஜித்திடம் இருந்து வாங்கினார் என்று ஒரு தகவல் உண்டு.
இப்படிப்பட்ட அன்புச் செழியன் தான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.