ஏழைக் குழந்தைகளுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் தீபாவளி விருந்து..! நெகிழ வைத்த எம்பி!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் ஏழைக் குழந்தைகளை உயர் தர நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்று தீபாவளி கொண்டாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


அரசியல்வாதிகள் என்றாலே தேர்தல் சமயத்தில் மட்டும் வீடு தேடி வருவர். மற்ற நேரத்தில் அவர்களை சந்திக்க முடியாத அளவுக்கு எட்டாக் கனியாகத்தான் இருப்பார்கள் என்கிற எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் ஒரு அமைச்சர் அசத்தியுள்ளார். 

இதை கேள்விப்படும் நீங்கள் உடனே நம்மூர் அமைச்சர்களோ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட்டுவிட வேண்டாம். ஏனெனில் இந்த சம்பவம் நிகழ்ந்தது மத்திய பிரதேச மாநிலத்தில். அக்டோபர் 27ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச உயர்கல்வி அமைச்சர் ஜிதேந்திர பட்வாரி ஏழை குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதற்காக தன்னுடைய உதவியாளர் மூலம் சில குழந்தைகளை வரவழைத்தார். பின்னர் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு இந்தூரில் உள்ள 5 நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றார்.

அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏழைக் குழந்தைகள் மகிழ்ச்சியாக தங்கள் தீபாவளியை கொண்டாடினர். மேலும் அவர்களுக்கு உயர்தர விருந்து அளித்த அமைச்சர் ஜிதேந்திர பட்வாரி இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் வழங்கி மகிழ்ந்தார். நமக்கு விருந்து அளித்தவர் ஒரு அமைச்சர், அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார் என்பது குழந்தைகள் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ வயதில்லைதான்.

ஆனாலும் பிற்காலங்களில் வளர்ந்து அந்த குழந்தைகளுக்கு கருத்து தெரியும்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நினைக்கும்போது நமக்கே சிலிர்ப்பாகத்தான் உள்ளது.