உயிருக்கு துடித்த இளைஞர்! தோளில் சுமந்து ஒன்றரை கி.மீ ஓடிய காவல் அதிகாரி! நெகிழ வைக்கும் சம்பவம்!

ரயிலில் இருந்து கிழே விழுந்து உயிருக்கு போராடிய நபரை தோளில் சுமந்தபடி ஒன்றரை கிலோ மீட்டர் ஓடிய காவல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.


மத்திய பிரதேச மாநிலத்தின் செனாய் மால்வா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தள்ளது. அம்மாவத்தில் உள்ள சிறிய கிராமப்பகுதியை ரயில் ஒன்று அதிவேகத்தில் கடந்து கொண்டிருந்தது.

அப்போது ரயிலின் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் ரயில்வே தண்டவாளம் அருகே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் அதிகாரி பூனம் பில்லோர் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்தால் அந்த இடத்திற்கு வர முடியாது என்று தெரிந்து கொண்டார்.

இதனை அடுத்து சற்றும் யோசிக்கா காவல் அதிகாரி பூணம், காயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த இளைஞரை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டார். அதோடு மட்டும் அல்லாமல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சாலைக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் இளைஞரை சுமந்து கொண்டே ஓடி வந்தார்.

அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, காயம் அடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் அதிகாரி பூணம் இளைஞரை தோளில் சுமந்து வந்த போது வீடியோ பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இளைஞரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுமந்து வந்த காவல் அதிகாரி பூணத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.