ம.பி. முதலமைச்சர் கமல்நாத் பதவி விலகல்!

உச்ச நீதிமன்ற ஆணையின்படி மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் கமல்நாத், தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பதவிவிலகப் போவதாக அறிவித்தார். மக்கள் தனக்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்ய வாக்களித்ததாகவும் ஆனால் பா.ஜ.க.வானது அதைப் பறித்துவிட்டதாகவும் அவர் கூறினார். தான் பதவிக்கு வந்ததுமுதலே தனக்கு எதிராக பா.ஜ.க. சதிசெய்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் 230 பேர். இவர்களில் இருவரின் இடம் காலியானது. 228 பேரில் கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், 6 அமைச்சர்கள் உள்பட 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகினர். காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான இவர்கள் அனைவரும், பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களைச் சந்திக்க முயன்ற ம.பி. காங்கிரஸ் தலைவர்களை கர்நாடக போலீசு தடுத்துவிட்டது. விவகாரம் உச்ச நீதிமன்றம் போனது. இன்று மாலைக்குள் அரசானது நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் என ஆணையிட்டது. அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில், நேற்று 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிவிலகலையும் அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டதால், அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206ஆகவும் காங்கிரசின் பலம் 92ஆகவும் குறைந்தது. 104 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு அவசியமான நிலையில் பெரும்பான்மையை இழந்ததால், கமல்நாத் அரசுக்கு நெருக்கடி உண்டானது. ஆளுநரிடம் தன் விலகல் கடிதத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.