ஏரிகளை பட்டா போட்டு வித்த திமுகவினர் இன்று தண்ணீருக்காக போராடுவதா? மதுசூதனன் டென்சன்!

தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் செய்ய அதிமுக தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தது


வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் இன்று வியாசர்பாடிரவீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மதுசூதனன் பேசியதாவது, நாங்கள் மக்களுக்காக மழை வேண்டி தற்போது ஆண்டவனை வேண்டுகிறோம். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவியோடு ஜோடியாக சிங்கப்பூரில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் செய்தால் தண்ணீர் வந்துவிடுமா? இன்று இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வந்ததற்கு  திமுக தான் காரணம். அண்ணா கொண்டுவந்த வீராணம் திட்டத்தை வீணான திட்டமாக மாற்றியவர்  கலைஞர்.  

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஏரிகளை பட்டா போட்டுக் கொள்ளையடித்தவர்கள் திமுகவினர். இன்று தண்ணீருக்கு போராட்டம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.