சென்னையில் முதல் முறை! செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண்! பரபரப்பு சிசிடிவி காட்சி!

போதைப் பொருள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களை திருடுவதும், செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்ட வந்த லவ் பேர்ட்ஸ் சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வரும் பிரசன்னா லிப்சா என்பவர் பணிமுடிந்து கோபதி நாராயணசாமி சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தன்னுடைய காதலியை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்த்திக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த நபர் லிப்சா அருகே வரும்போது அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

உடனடியாக லிப்சா குரல் கொடுத்தும் மற்றவர்கள் வந்து உதவுவதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லிப்சா புகார் அளித்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். 

பின்னர் சென்னையில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை ஓட்டிச் சென்றது திருட்டு வண்டி என்பதை உறுதி செய்தனர். வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய அந்த காதல் ஜோடி அப்படியே கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே வந்தபோது அங்கேயும் ஒரு செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு இருவரும் ஓய்வெடுக்க வீட்டிற்கு சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நேபர் சூளைமேட்டை சேர்ந்த டாட்டூ வரைகலை நிபுணர் ராஜு என்பதும் அவரது காதலி தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் கரூரை சேர்ந்த சுவாதி என்பதும் தெரியவந்தது.

இருவரும் ஒன்றாக அறை எடுத்து தங்கி அவ்வப்போது செல்போன் பறிப்பதும் பின்னர் அதை விற்று கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தவதையும் போலீசார் கண்டுபிடித்தனர். செல்போன் விற்கும் பணத்தில் மாமல்லபுரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று போதை மயக்கத்தில் உல்லாசமாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னையில் படிப்பதற்கு வெளியூரில் இருந்து பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் அவ்வப்போது சென்னைக்கு முகாமிட்டு அவர்களின் நடவடிக்கைகளை கவனித்தால் இதுபோன்ற சிறை உள்ளிட்ட அவமானங்களை சந்திக்காமல் இருக்கலாம்.