உங்கள் காதலன் உண்மையானவனா? கண்டுபிடிக்க எளிய வழிகள் – காதலர் தின சிறப்புக் கட்டுரை!

இந்த உலகில் உண்மையான காதலைவிட, ஏமாற்றுவதற்காக காதல் செய்பவர்களும், டைம்பாஸ் காதல் செய்பவர்களும்தான் அதிகம். அதனால் அப்படிப்பட்ட காதலன்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


விரட்டி விரட்டி காதலிப்பது ஆண்களின் ஸ்டைல். அந்தப் பெண் காதலில் விழுந்தவுடன் ஆண் அவளை கதற விடுவான். ஒரு கெத்துக்காகத்தான் காதல் செய்தேன் என்று சொல்வான். அதனால் உண்மையாக ஒருவன் காதலிக்கிறானா என்பதைக் கண்டுகொள்ள எளிதான சில வழிகள் இருக்கின்றன.

சொன்ன நேரத்துக்கு எல்லாம் அலாரம் வைத்ததுபோல் ஒருவன் வந்து நிற்கிறானா? நிச்சயம அவன் சரியான நபர் இல்லை. ஏனென்றால் பணி மற்றும் பல காரணங்களால் கால தாமதம் ஏற்படுவது இயல்பு. அது இல்லாமல் எப்படியாவது வளைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் சொன்ன நேரத்துக்கு முன்னரே வந்து காத்திருந்து பில்டப் கொடுப்பார்கள். அதற்காக வேண்டுமென்றே தாமதமாக வருபவனையும் நம்பிவிட வேண்டாம்.

சாதாரண உடை உடுத்தியிருந்தாலும், அளவுக்கு மீறி அழகைப் புகழ்கிறானா… இந்தக் காலத்திலும் கவிதை எழுதிக் கொண்டுவந்து படிக்கிறானா, உன்னை பார்க்க முடியவில்லை என்றால் செத்துப்போவேன் என்று டயலாக் விடுகிறானா… அவன் சரியானவன் இல்லை, உடனே விலகிவிடுங்கள். இயல்பாக பேசவேண்டும், பழக வேண்டும் அதுதான் உண்மையான காதல்.

 எங்க அம்மாவுக்குப் பிறகு உன்னைப் பார்க்கும்போது மட்டும்தான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என் மீது யாருமே அன்பு செலுத்துவது இல்லை. எனக்கு நண்பர்களே இல்லை என்ற ரீதியில் யாராவது சொன்னால் நம்பவே நம்பாதீர்கள். அவன் ஒரு ஃப்ராடு.

நண்பன் அல்லது உறவினருடன் காதலன் நிற்கும்போது நீங்கள் பார்த்துவிட்டால், உடனே கூப்பிட்டு அறிமுகம் செய்து வைக்கிறானா அல்லது கண்டுகொள்ளாமல் போகும்படி சொல்கிறானா என்று பாருங்கள். தைரியமாக அறிமுகம் செய்கிறான் என்றால் அவன் தேறுவான். ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப் பார்த்தால் ஏமாற்றுக்காரன்.

நீ என்னை காதலிக்கவில்லை என்றால் செத்துவிடுவேன் என்று சொல்கிறானா? உடனே அவனைவிட்டு விலக வேண்டியது அவசியம். அவன் ஒரு முட்டாள். இன்று செத்துவிடுவேன் என்று சொல்பவன், நாளை நீ கிடைக்காவிட்டால் கொலை செய்வேன் என்று சொல்வான். அதனால் உடனே கத்தரித்துவிடவும். 

சம்பளம் எவ்வளவு, எப்போது புரமோசன் கிடைக்கும், எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை எல்லாம் இயல்பாக சொல்கிறானா அல்லது கதை விடுகிறானா என்று பாருங்கள். ஏதேனும் ஒரு வகையில் செக் செய்து உண்மையைக் கண்டுபிடியுங்கள். நிறைய சொத்து இருக்கிறது, பெரிய சம்பளம் என்று ஏமாற்றுபவனை உடனே விலக்குங்கள்.

கல்யாணம் பற்றி பேச்சை அவனே எடுக்கிறானா என்பதைக் கவனியுங்கள். நீங்கள் கல்யாணம் பற்றி பேசத் தொடங்கியும் அவன் கண்டுகொள்ளவில்லை என்றால் உஷாராகுங்கள். கோயிலில் தாலி கட்டிக்கொள்வோம், ஊரைவிட்டு ஓடுவோம் என்ற ரீதியில் பேசினால் நீங்கள் அவனைவிட்டு ஓடும் நேரம் என்று புரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஒரே பைக், ஒரே மாதிரி ஆடைகள், ஒரே மாதிரி செலவழிக்கிறானா என்பதைப் பாருங்கள். கவரவேண்டும் என்பதற்காக விதவிதமாக நண்பர்களிடம் பைக் வாங்கி வருபவன், விதவிதமான ஆடை உடுத்தி வருபவன் நிச்சயம் கல்யாணம் வரை வரமாட்டான்.

பெண்ணை அனுபவித்துவிட்டு, அவளிடம் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடுவதுதான் ஏராளமான ஆண்களின் எண்ணம். ஆகவே, காதல் என்ற பெயரில் இந்த வலையில் விழுந்துவிடாதீர்கள். உண்மையான காதலன் வரும்வரை காத்திருங்கள். இல்லையென்றால் கணவனை காதலியுங்கள்.