திடீரென வந்து நின்ற கார்..! இளம் பெண்ணை கணவன் முன் கடத்திய திடுக் சம்பவம்! கோவை பரபரப்பு!

கோவை: காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். 22 வயதான இவர், கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிகிறார். இவர், கோத்தகிரியை சேர்ந்த நித்யா என்ற 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த விசயம் இருவரது வீட்டிற்கும் தெரியவே, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, நித்யாவும், விக்னேஷும் ரகசியமாக திருமணம் செய்ய தீர்மானித்தனர். இதன்படி, துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உதவி கோரினர். இதையடுத்து, இரு வீட்டாரையும் போலீசார் அழைத்துப் பேசினர். ஆனால், நித்யா பிடிவாதமாக இருந்ததால், அவரையும், விக்னேஷையும் ஒன்றாக அனுப்பி வைத்தனர். பிறகு, நித்யாவும் அவரது காதலனும் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியிலேயே வாடகைக்கு வீடு பிடித்து, தனிக்குடித்தனம் நடத்த தொடங்கினர்.  

இந்நிலையில், சமீபத்தில் கோத்தகிரி போலீசில், நித்யாவின் தந்தை, தன் மகளை காணவில்லை எனக் கூறி பொய்ப் புகார் அளித்தார். இதுபற்றி விசாரித்த போலீசார், ஏற்கனவே நடந்த விவரங்களை தெரிந்துகொண்டனர். இருந்தாலும், விக்னேஷ், நித்யாவை ஒருமுறை கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.

இதற்காக, துடியலூர் பஸ் நிலையம் சென்று, கோத்தகிரிக்கு பேருந்து பிடிக்க விக்னேஷ், நித்யா தம்பதி முயன்றனர். அப்போது திடீரென அங்கு காரில் வந்த நித்யாவின் தந்தை அர்ஜூனன் உள்ளிட்ட 3 பேர் திடீரென விக்னேஷை கீழே தள்ளிவிட்டு, நித்யாவை கடத்திச் சென்றுவிட்டனராம்.  

இதுபற்றி உடனடியாக விக்னேஷ் துடியலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து, நித்யாவின் தந்தை உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.