குறுக்கே வந்த ஸ்கூல் வேன்! ஒரு நொடி அலட்சியம்! தாய்-மகள் மீது ஏறி இறங்கிய லாரி! பதற வைத்த விபத்தின் சிசிடிவி!

நாமக்கல்லில் மாமனார் விபத்துக்குள்ளான அதே பகுதியில் மருமகளும் பேத்தியும் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையடுத்த வாத்தியார் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சித்ரா. இவருக்கு யஷ்வந்த் என்ற மகனும் இன்ஷிகா என்ற மகளும் உள்ளனர். எப்பொழுதும் தனது மகன் மற்றும் மகளை வெவ்வேறு இடங்களில் பள்ளி வேனில் ஏற்றிவிட சேலம் to நாமக்கல் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு போய் விடுவார்.

அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது மகன் யஸ்வந்தை ஒரு பள்ளி வேனில் ஏற்றி விட்டு மகள் இன்ஷிகாவை மற்றொரு பள்ளி வேனில் ஏற்றி விட மற்றொரு இடத்திற்கு நாமக்கல் டு சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அவர் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து ஒருபுறம் பள்ளி வேன் வருவதை மட்டும் கவனித்து சாலையை கடந்த சித்ரா மறுபுறம் அதிவேகமாக வந்துகொண்டிருந்த லாரியை கவனிக்கவில்லை. இதனால் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாய் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியதோடு மட்டுமல்லாமல் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

மேலும் இறந்த சித்ராவின் மாமனார் சில வாரங்களுக்கு முன்பாக அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் தற்பொழுது இருக்கும் நிலையில் சித்ராவின் கணவர் கதறி அழுகும் நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.