டாக்டர் படிக்கும் மகளுக்கு தந்தையின் கண் முன்னே நடந்த விபரீதம் - குடிகாரர்களின் கொடூரச்செயல்

தாராபுரம்: தந்தை கண் முன்னே லாரி மோதி மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சின்னப்பள்ளம் வயலை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.  இதில், மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், 2வது மகள் லாவண்யா பல் டாக்டருக்கு படித்திருக்கிறார். படிப்பு முடிந்ததும் தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்ல தொடங்கிய லாவண்யாவை, அவரது தந்தை தினசரி பேருந்தில் ஏற்றிவிடுவது வழக்கம். 

இந்நிலையில், நேற்றிரவு சத்திரம் பஸ் ஸ்டாப்பில் வேலை முடிந்து பேருந்தில் வந்து இறங்கிய லாவண்யாவை அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, சின்னப்பள்ளம் பிரிவு அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் குடிபோதையில் வந்து, லாவண்யா, அவரது தந்தை  சென்ற வண்டி மீது மோதியுள்ளனர்.

இதில், லாவண்யா வண்டியில் இருந்து கீழே விழ, எதிரே வந்த லாரி அவர் மீது ஏறிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது. லாவண்யா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுபற்றி தாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.