உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா இல்லையா? திடீர் அதிகாரிகள் மாற்றம் எதற்காக?

என்ன காரணத்துக்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைத்து நீதிமன்றம் சென்றதோ, அந்தக் கோரிக்கையில் ஒன்றுகூட இன்னமும் நிறைவேறவே இல்லை என்கிறார்கள்.


குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி வரையறை போன்ற எதுவுமே துல்லியமாக இல்லை. இந்த லட்சணத்தில் எப்படி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தமுடியும் என்று அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இப்போது திடீரென தேர்தல் அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். தேர்தல் வரக்கூடாது என்பதற்காக மாற்றப்பட்டுள்ளாரா என்று கேட்கிறார்.

அதேபோன்று ஐந்து மாதத்தில் 3 செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். இவைதான் அவரது சந்தேகங்கள்.

லட்சக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பதவி என்பது அதி முக்கியமானது. இப் பதவியானது தொடர்ந்து பந்தாடப்பட்டு வருகிறது. 6 மாதத்தில் மூன்று செயலாளர்களை கண்டுள்ளது மாநிலத் தேர்தல் ஆணையம். 

செயலாளர் 1: 

2016ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகள் செயலாளராக பணியாற்றி வந்தவர் டி எஸ் ராஜசேகர் ஐ.ஏ.எஸ். இவர் கடந்த ஜூன் மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறார். (மதுரையில் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுத்து நீண்ட விடுப்பில் சென்றார். இப்போது, மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.)

செயலாளர் 2:

பேரூராட்சிகளின் இயக்குனராக இருந்த எஸ் பழனிச்சாமி அவர்கள் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக ஜூன் 2019ல் நியமிக்கப்படுகிறார். அப்போதும் கூட முழுமையாக தேர்தல் ஆணைய பணிகளை செய்ய விடாமல் பேரூராட்சி இயக்குனர் பணியும் கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டது. நேற்று, இவர் மீண்டும் பேரூராட்சிகளின் இயக்குனராக (மாநிலத் தேர்தல் ஆணையர் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன்பு பணியாற்றி வந்த அதே பொறுப்பில்) நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர் 3: 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரமணியன் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை செயலாளர் டிரான்ஸ்பர் என்பது தேர்தலை தள்ளிப்போடுவதற்கான உத்தியாக இருந்தது. அதேநேரம் நேற்றைய மாற்றம் என்பது உள்ளாட்சித் தேர்தலை ‘சிறப்பாக’ நடத்துவதற்காகவா என்று கேட்கிறார். ஆளும் கட்சியினர் பதில் சொல்வார்களா?