ஊராட்சித் தேர்தல் விறுவிறுப்பா நடக்குது. ஆனால், ரிசல்ட் வருமா?

நடக்குமா, நடக்காதா என்று இத்தனை காலம் இழுத்துவந்த ஊராட்சித் தேர்தல் ஒருவழியாக இன்று நடைபெற்றுள்ளது.


 ஆனால், தேர்தல் ரிசல்ட்டை அறிவிக்காமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால், வேட்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இன்றைய தினமும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடக்க உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓட்டுக்களை எண்ணக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டிசம்பர் 30ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எம்.பி தாக்கல் செய்த மனுவும் டிசம்பர் 30ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த மனு ஏன் போடப்பட்டது என்பதை, சட்டப்பஞ்சாயத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

1. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அதில் அதிக இடங்களை வென்றுள்ள கட்சிக்கு வாக்களிக்கவே நகர்ப்புற வாக்காளர்கள் விரும்புவார்கள்.. இது தேர்தல்களின் அடிப்படையான "சமதள வாய்ப்பு" என்பதைத் தகர்க்கிறது.

2.அரசியல் காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலேயே போய்விடக்கூடும்... இப் பொதுநல வழக்கு மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து.. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க வைக்கவே!

3. நீதிபதிகள் மனது வைத்தால் , தேர்தல் ஆணையம் எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வாங்க முடியும்.. நீதிபதிகள் இதை செய்வார்கள் என்று நம்புகிறோம்.

4. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே (டிசம்பர் 3, 2019) 

நகர்ப்புற தேர்தல் முடியாதவரை ஊரக முடிவுகளை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் விரிவான மனு அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

5. விளைவுகள் எதுவாக இருந்தாலும்.. முயற்சிகள் முக்கியம் என்பதே சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் போக்கு.. அதன்படியே இந்த பொதுநல வழக்கு என்று தெரிவித்துள்ளார்.