காதலின் விலை ஆயுள் தண்டனை! அண்ணாச்சியை ஆட்டுவித்த ஜீவஜோதி!!

சரவணபவன் ஹோட்டல் ருசிக்கு மயங்காதவர் யாரும் இருக்கமுடியாது. ஆனால், அண்ணாச்சி ராஜகோபால் மட்டும் ஜீவஜோதியிடம் மயங்கினார்.


சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு ஏற்கெனவே 2 மனைவிகள். சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தவரின் மகள்தான் ஜீவஜோதி. அவர் பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல்கொண்டு திருமணம் முடித்துக்கொண்டார். அந்த நேரத்தில்தான் முதலாளியின் கண்ணில் பட்டார் ஜீவஜோதி.

ஏற்கெனவே இரண்டு மனைவிகள் இருந்தாலும் காதல் நெருப்பில் விழுந்துவிட்டார் அண்ணாச்சி. குடும்ப வாழ்வில் சின்னச்சின்ன சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்தில் அவரது குடும்ப ஜோதிடர் ஒருவர், மூன்றாவதாக ஒர் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், எங்கோயோ போய்விடலாம் என்று சொன்னார்.

இதையடுத்து கண்ணில் விழுந்த ஜீவஜோதியின் ஜாதிக் கட்டத்தை ஜோதிடரிடம்  கொடுத்தார். மூன்றாவது மனைவியாகும் அத்தனை தகுதியும் ஜீவஜோதிக்கு இருப்பதை ஜோதிடர் உறுதி செய்தார். கணவர் இருக்கும் வரை, கல்யாணத்துக்கு ஜீவஜோதி சம்மதிக்க மாட்டார் என்பதால், சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்குப் போனார் ஜீவஜோதி. 

வழக்கு தொடரப்பட்டு  2004-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு தண்டனையோடு சேர்த்து 55 லட்ச ரூபாய் அபராதத்தையும் விதித்தது.  அதன்பிறகு ஜீவஜோதியிடம் சமாதானம் பேச முயன்ற விவகாரத்திலும் சிக்கலுக்கு ஆளானார் அண்ணாச்சி. இந்த விவகாரத்தில் ஜீவஜோதியை கடத்தியதாக அண்ணாச்சி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக  அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், இதை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். `தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்' என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

வரும் ஜூலை 7ம் தேதிக்குள் அண்ணாச்சி சரண் அடையவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருந்தாலும், அண்ணாச்சி ஜெயலுக்குப் போவதை ஜீவஜோதி நினைத்தாலும் தடுக்க முடியாது.