அய்யா எடப்பாடி பழனிசாமிக்கு பாமரன் எழுதும் கடிதம் இல்ல கடுதாசின்னே வைச்சுக்கலாம்..!

எழுத்தாளர் பாமரனின் எழுத்துக்கள் பற்றி யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. வழக்கமாக நகைச்சுவையாக எழுதும் பாமரன், இப்போது சீரியஸ் விஷயமாக அங்கன்வாடி மழலையர் விவகாரத்தைக் கையில் எடுத்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

இப்பேரிடர் காலத்திலும் ஐந்து வயதிற்கு உட்பட்ட அங்கன்வாடி மழலையர்க்கு ஊட்டச்சத்து வீடு தேடிச் சென்று அளிக்கப்படுவது அறிந்து பெரும் மன நிறைவு கொள்கிறோம். 

கொரோனாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மற்றொரு முக்கியமான தேவையினையும் அரசினது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

தமிழகத்தில் வசதிபடைத்தோரும் வாய்ப்புள்ளோரும் வீடுகளுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தமது பிள்ளைகளுக்கு உணவளித்து வரும் நிலையில் ஏதுமற்ற ஏழைகள் பள்ளி சென்று கொண்டிருந்த தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணில் ஒருவேளை உணவாவது கிடைக்கும் என்கிற ஏக்கத்தில் பள்ளி செல்லும் மழலைகள் எண்ணற்றோர் உண்டு என்பது அரசும் அறிந்த ஒன்றுதான். 

இந்தியாவுக்கே வழிகாட்டியாக விளங்கும் நமது சத்துணவுத் திட்டத்திற்கு நெடியதொரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. நீதிக்கட்சி ஆட்சியின்போது 1923 இல் தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த ராவ் சாகிப் எல்.சி.குருசாமி அவர்களது குரலால் சென்னையில் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது மதிய உணவுத்திட்டம். பிறகு காமராசர் காலத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டதும் பின்னர் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது ஆட்சியில் தமிழகமெங்கும் சத்துணவு திட்டமாக பரவலாக்கப்பட்டதும் செழுமைப்படுத்தப்பட்டதும் வரலாறு.

ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் வரையிலும் கூட ஒருவேளையாவது பள்ளிகளில் சத்துணவு உண்டு வந்த அச்சிறுவர்கள் பள்ளிகள் மூடப்பட்டதனால் தற்போது சத்துணவு இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள். 

பெற்றோர்கள் பெரிதளவிலான வேலை வாய்ப்பும் வருமானமும் இன்றி தவிக்கும் இப்பேரிடர் காலத்தில் தங்களது குழந்தைகளுக்கு எப்படி அவர்களால் உணவளிக்க முடியும்? எனவே, ஏற்கெனவே எண்ணற்ற இடர்ப்பாடுகளுக்கு ஊடாக பணியாற்றி வரும் தமிழக அரசு கவலைதரும் இப்பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காண முன்வர வேண்டும்.

தமிழகமெங்கும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைத்து வந்த அந்த ஒருவேளை சத்துணவாவது வெகுவிரைவில் கிடைக்க வழி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஓரளவிற்காவது நமது நிர்வாகக் கட்டமைப்பு செம்மையாக இருக்கக்கூடிய தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் மனது வைத்தால் செய்து முடித்துவிடக்கூடிய பணிதான் இது. 

கிருமித் தொற்று பள்ளிச் சிறார்களுக்கும் தொற்றிவிடும் என்கிற அச்சுறுத்தல் நிலவுகிற இச்சூழலில் அக்குழந்தைகள் இருக்குமிடத்திற்கு அரசே கொண்டு சென்று சேர்க்கலாம். அல்லது உணவு வழங்குமிடத்திற்கே பெற்றோரை வரவழைத்து அவர்களது பிள்ளைகளுக்கான சத்துணவினை பெற்றுச் செல்லும்படி ஏற்பாடு செய்யலாம்.

பள்ளிகள் ஜூலையில் திறக்குமா? ஆகஸ்டில் திறக்குமா? என்கிற வினாக்களுக்கே விடை தெரியாத இச்சூழலில் பள்ளிகள் திறக்கும்வரை அக்குழந்தைகளை சத்தான உணவுக்காகக் காத்திருக்க வைக்காமல் குறைந்தபட்சம் ஒருவேளை சத்துணவாவது அவர்களுக்குக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தால் மனதார நன்றி கூறுவார்கள் மக்கள் என்று எழுதியிருக்கிறார் பாமரன்.