ஒரு பெண் சிறுத்தையும், ஆண் குதிரையும் தங்கள் இயல்புக்கு மாறாக நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது
பெண் சிறுத்தையுடன் ரொமான்ஸ் செய்யும் ஆண் குதிரை! வைரல் வீடியோ!
விராட் என்ற கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கிராம மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அந்த சிறுத்தை நாய் ஒன்றையும் அடித்துக் கொன்றதையடுத்து மக்களின் பீதி அதிகரித்தது. இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தை விலங்குகள் அமைப்பு ஒன்றை நடத்தி வரும் சந்தோஷ் பவார் என்பவர் கண்காணிக்க முடிவு செய்தார்.
சிறுத்தை பீதியில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த நிலையில் கையில் கேமராவுடன் சிறுத்தையை கண்டு பிடித்து பதிவு செய்யும் ஆர்வத்துடன் பவார் சுற்றி வந்தார். இந்நிலையில் தொழிலதிபரான ஜகதீஷ் பட்டேல் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் பவாருக்கு காண அரிய காட்சி ஒன்று கிடைத்தது.
தோட்டத்தில் நின்றிருந்த குதிரை அருகில் சிறுத்தை படுத்திருந்தது. தனது இயல்புக்கு மாறாக குதிரை மீது பாய்ந்து தாக்கவோ, கொன்று தின்னவோ முயற்சிக்காமல் அமைதியுடனும் குதிரைக்கருகில் படுத்திருந்தது. ஒரு கட்டத்தில் இரண்டும் கொஞ்சிக் கொள்ள ஆரம்பித்தன.
கட்டப்பட்டிருந்த குதிரையும் அஜ்சி மிரளவோ கட்டை அறுத்துக்கொண்டு ஓடவோ முயற்சி செய்யாமல் வெகு இயல்பாக சிறுத்தையுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது அதிசயிக்கத்தக்க இந்தக் காட்சியை பவா தனது வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்த ஆதாரம் வனத்துறைக்கு கொடுக்கப்பட்டு அதனை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.