6 மாதங்கள்! வோடாபோனை விட்டு தெறித்து ஓடிய 6 கோடி பேர்! ஜியோவை தேடி பறந்து வந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டெல்லி: கடந்த 6 மாதங்களில், சுமார் 7 கோடி வாடிக்கையாளர்களை வோடஃபோன் நிறுவனம் இழந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் அதிரடி அறிவிப்புகளை நாளுக்கு நாள் அறிவித்து வருகிறது. இதனால், அந்நிறுவனத்தில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. 

ஜியோ வரவால், ஏர்டெல், வோடஃபோன் போன்ற இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்திய நிறுவனங்களின் வர்த்தகப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும், ஜியோ நிறுவனம் 4 கோடியே 40 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

அதேசமயம், ஏர்டெல் நிறுவனம்  2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதேபோல, வோடஃபோன் நிறுவனம் 6 கோடியே 80 லட்சம் (கிட்டத்தட்ட 7 கோடி) வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த மினிமம் ரீசார்ஜ் பிளான் ஆகும். 

தற்போதைய நிலையில், இந்திய அளவில் 3ஜி, 4ஜி சேவையில் ஜியோவின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. இதுவே ஏர்டெல்லின் பங்களிப்பு 23 சதவீதமாகவும், உள்ளது. எதிர் வரும் நாட்களில் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சந்தை பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால், என்ன செய்வதென்ற குழப்பத்தில் வோடஃபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

இதில், ஏர்டெல் நிறுவனம் ஒரேயடியாக, தனது 3ஜி சேவையை நாடு முழுவதும் நிறுத்த உள்ளதாக, அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.