கொங்கு மண்டலத்தில் அதிமுகவை கவிழ்த்த பெண் போலீஸ் அதிகாரி! பரபரப்பு தகவல்!

மக்களவைத் தேர்தலில், கொங்கு மண்டல வட்டாரத்தில் அதிமுக தோல்வியடைந்ததற்கு, போலீஸ் அதிகாரிகளுக்கே பெரும்பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்களவை தேர்தலில், ஆளும் அதிமுக, பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில், வாக்குப் பதிவு முடிந்ததில் இருந்து, நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அதிமுக.,வின் கோட்டை எனக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சிக்கு இப்படி சறுக்கல் ஏற்படுவதற்கு, சமீபத்தில் வெளியான பாலியல் புகார்கள் முக்கிய காரணம் என்று போலீஸ் வட்டாரத்தில் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிமுக.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக நடந்துகொண்டது, மக்களிடையே  அதிமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். அதிலும் குறிப்பாக, ஐபிஎஸ் அந்தஸ்து கூட பெறாத பாண்டியராஜனை, ஆளும் கட்சியின் கொங்கு மண்டல பிரமுகர் தனது தேவைக்காக, பொள்ளாச்சி எஸ்பியாக நியமித்தார்.

இதுபோல, ஏடிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் என எல்லோருமே ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களாகவே, பார்த்து பார்த்து நியமிக்கப்பட்டனர். இதனால், மக்கள் பணியைவிட ஆளுங்கட்சியினரின் தேவையை பூர்த்தி செய்வதிலேயே போலீசாருக்கு நேரம் சரியாக இருந்தது. கொங்கு மண்டலத்தில் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு நெருக்கமாக உள்ள ஒரு பெண் போலீஸ் அதிகாரிதான் இத்தகைய பணி நியமன கோளாறுகளுக்கு முக்கிய காரணமாம். அவர் செய்த தில்லுமுல்லு காரணமாக, போலீஸ் துறை சீரழிந்து, அதிமுக.,வின் இமேஜூம் டேமேஜ் ஆகிவிட்டதாக, சக போலீசாரே சுட்டிக்காட்டுகின்றனர்.