கற்பழித்தவனை கல்யாணம் செய்து கொள்! இல்லை என்றால்..? இளம் பெண்ணை மிரட்டிய பெண் அரசு வழக்கறிஞர்! திருவள்ளூர் திகுதிகு!

சென்னை: பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, தமிழக பெண் வக்கீல் ஒருவர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.


திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணிபுரிபவர் தனலட்சுமி. இவரிடம்  சமீபத்தில் 2 பாலியல் பலாத்கார வழக்குகள் வந்துள்ளன. இதில், மாற்று திறனாளி சிறுமி ஒருவர் 2015ம் ஆண்டு பலாத்காரத்திற்கு உள்ளானார். இதேபோல, தற்போது 20 வயதான பெண், சில ஆண்டுகளுக்கு முன் மைனராக இருந்தபோது, பக்கத்து வீட்டு நபரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இவ்விரு வழக்குகளும் போலீஸ் புகாரை தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞரான தனலட்சுமியின் விசாரணைக்கு வந்தது. அவரும் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட வேண்டிய தனலட்சுமி, அதைச் செய்யாமல் குற்றவாளிகள் சார்பாக, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்ட தொடங்கியிருக்கிறார்.  

குறிப்பாக, தற்போது 20 வயதாகும் மரியா என்ற பெண், 17 வயதாக இருந்தபோது பக்கத்து வீட்டு நபர், அவரை பலாத்காரம் செய்துவிட்டார். இந்த வழக்கு 2015 முதல் நடைபெற்று வருகிறது. விசாரணை தொடங்கிய நாளிலேயே மரியாவை தனி அறைக்கு அழைத்த தனலட்சுமி, ''குற்றவாளியை திருமணம் செய்துகொள் அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாகப் போய்விடு,'' எனக் கூறி மிரட்டி வந்திருக்கிறார். இதன்பேரில் தனலட்சுமி மீது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது மரியா புகார் அளித்துள்ளார். 

இதுபோலவே, மாற்றுத் திறனாளி சிறுமி விவகாரத்திலும், அவரது பெற்றோர் தனலட்சுமியை குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்துள்ள போலீஸ் புகாரில், ''தங்களது மகளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், பலாத்காரம் செய்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், திடீரென சீனிவாசன் குற்றமற்றவர் எனக் கூறி நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் தனலட்சுமிதான். அவர் குற்றவாளியிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவருக்குச் சாதகமான தீர்ப்பை பெற்று தந்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனக் கூறியுள்ளனர்.