போலீஸ் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணி உஷா நினைவிருக்கிறதா? அவரது கணவன் என்ன ஆனார் தெரியுமா?

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பெண்ணை எட்டி உதைத்து மரணத்தை ஏற்படுத்தியதாக கைதாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது. மனைவியை இழந்தவர் வேலைக்கு செல்லாமல் விவசாயம் பார்த்து வருகிறார்.


தஞ்சை மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா திருச்சியை சேர்ந்த உஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார் ராஜா. துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது நிற்காமல் சென்ற ராஜாவை ஆய்வாளர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று விரட்டி பிடிக்க முயன்றார்.

ஆனால் ராஜா நிற்காமல் செல்லவே அந்த வாகனத்தை எட்டி உதைத்ததில் ராஜாவும் அவரது மனைவியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் உஷா உயிரிழந்தார்.  

இதையடுத்து உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் உஷா உயிரிழந்தபோது கர்ப்பிணியாக இருந்தார் என்ற தகவல் பரவவே பிரச்சனை இன்னும் பெரிதாக மாறியது. ஆனால் உஷாவை உடற்கூறு செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பிணி இல்லை என்பதை உறுதி செய்தபின் ஓரளவு பிரச்சனை அடங்கியது.

எதிர்கட்சியினரும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்க இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் காமராஜ் மீது `உள்நோக்கம் இல்லாமல் மரணம் ஏற்படுத்துதல்’ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். 35 நாளுக்கு பின்னர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமின் பெற்றார் காமராஜ்.

இந்நிலையில் வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளர் காமராஜ், ஒரு மாதத்துக்கு முன்பு, நாகை மாவட்டத்தில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் மனைவியை இழந்த ராஜா வேலைக்கு செல்லாமல், சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்.