குழந்தையின் தலையை மட்டும் தனியாக எடுத்த டாக்டர்கள்! வயிற்றுக்குள் உடல் மட்டும் சிக்கிய விபரீதம்! பிரசவத்தின் போது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!

ஐதராபாத்: பிறக்கும்போது குழந்தை ஒன்றின் தலை துண்டான சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம், நாகர்குர்னுல் பகுதியில் ஆச்சம்பேட் ஹாஸ்பிடல் செயல்படுகிறது. இங்கு, நாடிம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  சுவாதி (23 வயது) பிரசவத்திற்காக சமீபத்தில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 18ம் தேதி சுகப் பிரசவம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென பிரசவ நாளன்று, சுவாதியின் வயிற்றில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி, வேறொரு மருத்துவமனைக்குச் செல்ல, அந்த ஹாஸ்பிடல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுவாதி குடும்பத்தினர் திகைப்புடன் ஐதராபாத்தில் உள்ள பேட்லாபுர்ஜ் மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு சுவாதியை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பையில் குழந்தை இறந்த நிலையில் கிடப்பதாகவும், குழந்தையின் தலை துண்டாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு, சி-செக்‌ஷன் எனும் முறையில் மருத்துவர்கள் கருப்பையில் உள்ள குழந்தையின் முண்டத்தை மட்டும் வெளியே எடுத்தனர்.

ஆச்சம்பேட் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் போதிய கவனமின்றி செயல்பட்டதால், பிரசவத்தின்போது குழந்தையின் தலையை பிடித்து வெளியே இழுக்க முயன்றதில், அதன் தலை துண்டானதாக தெரியவந்தது. தலையை மறைத்துவிட்ட மருத்துவர்கள், ஐதராபாத் செல்லும்படி சுவாதியிடம் சொல்லியுள்ளனர்.  

இதையடுத்து, ஆச்சம்பேட் ஹாஸ்பிடலை சுவாதியின் உறவினர்கள் முற்றுகையிட்டு, அடித்து நொறுக்கினர். இதன்பேரில், நாகர்குர்னுர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார நல அதிகாரி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஹாஸ்பிடலில் சுவாதிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் தாரா சிங் மற்றும் சுதா ராணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.