பகவான் கிருஷ்ணர் குறித்து ஆபாச கிண்டல்! கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு! விரைவில் கைது?

இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரை அவதூறாகப் பேசியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மார்ச் 22-ம் தேதி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணர் குறித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவதூறாகப் பேசியதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.

ஸ்ரீராதா தாமோதரர் வழிபாட்டு மையத்தின் தலைவர் சீதாபதி என்பவர், நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த  தி.க தலைவர் கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும் அந்த பேச்சு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் சீதாபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்துக்கள் மனது புண்படும் வகையில் கி.வீரமணி பேசியிருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி பழனிகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், இரு தரப்பினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுதல், திட்டமிட்டு மன உணர்வுகளைப் புண்படுத்தும்படி செயல்படுதல், அவதூறான கருத்துகளைப் பரப்புதல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் கி. வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்டச் செயலாளர் த.ராஜேந்திரனிடம் பேசியபோது, கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி தவறாக எதையும் கூறவில்லை. கிருஷ்ணர் குறித்து புராணங்களில் இருப்பவற்றை மட்டுமே அவர் பேசியதாக தெரிவித்தார். அதே சமயம் விமர்சனம் என்ற பெயரில் கிருஷ்ணரை ஆபாசமாக கி.வீரமணி பேசியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விரைவில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.