தொடங்கியது குற்றால சீசன்! ஆர்ப்பரிக்கும் அருவிகள்! குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்!

தென்காசியில் ,கோடையையொட்டி குற்றாலத்தின் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தை அடுத்து ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சுற்றுலாபயணிகள் அதிகரிக்கும் சீசன் இருக்கும். இந்த சீசனில்,  ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆரவாரத்துடன் தரையை நோக்கி பாயும்.

நேற்று காலை துவங்கி  குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் இதமான வெயிலும் நிலவி வர ரம்யமான வானிலை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதால் இந்த வருடத்தின் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததை அடுத்து,  நீர்பரப்பு பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதாவது, அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 130 கனஅடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி இது வினாடிக்கு 1,154 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.இதனால் அணையின் நீர்மட்டம் 12.20 அடியில் இருந்து 20.40 அடியாக உயர்ந்தது. அதாவது, ஒரே நாளில் நீர்மட்டம் 8.20 அடி உயர்ந்துள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு 77 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 275 கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படும் என கூறப்படுகிறது.