நாங்குநேரியில் குமரி அனந்தன்! விக்கிரவாண்டியில் உதயநிதி! தினகரன் எஸ்கேப்!

ஒருவழியாக தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.


அத்தோடு புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 21ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் சூழலில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறுகிறது. 

இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகள் பலப்பரிட்சையில் இறங்குகின்றன. எங்களுக்கு சின்னம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று தினகரன் எஸ்கேப் ஆகியிருக்கிறார். கமல்ஹாசனும் நிற்க மாட்டார் என்றுதான் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் காங்கிரஸ்க்கு உரிய நாங்குநேரி தொகுதியை தி.மு.க.வுக்குத் தரவேண்டும் என்று உதயநிதி ஏற்கெனவே பற்ற வைத்தார். அந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் முன்னர், இன்றே அந்தத் தொகுதியில் காங்கிரஸ் நிற்கும் என்று ஸ்டாலின் அறிவித்துவிட்டார். ஆக, விக்கிரவாண்டி தொகுதியில் மட்டுமே தி.மு.க. நிற்கிறது.

நாங்குநேரி தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வேண்டுகோளை ஏற்கும் நிலையில்தான் அத்தனை பேரும் உள்ளனர். குமரி அனந்தனுக்கு சீட் கொடுத்தால், முழு செலவுகளையும் தானே ஏற்பதாக வசந்தகுமார் அறிவித்துள்ளார்.

அதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதியை நிறுத்தவேண்டும் என்று பலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உதயநிதியை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளதால் தலைமை யோசித்து வருகிறது.

அ.தி.மு.க. சார்பில் இப்போதுதான் வேட்புமனு குறித்து பேசப்படும் வேளையில், வேட்பாளர்களையே அறிவிக்கும் நிலையில் தி.மு.க. இருப்பது புதுசுதான்.