குமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி

கொரோனா காலத்தில், குமுதம் பத்திரிகைக்கு எதிராக பெரும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.


மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவும், மாநிலத்தில் அ.தி.மு.க. அரசைபாதுகாக்கிற வகையிலும் செய்திகளை வெளியிடுவதற்கு சில ஊடகங்களோடு தமிழகத்தில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த உடன்பாட்டின்படி, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கிற வகையில் சில அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இரையாகி இருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்த வகையில் குமுதம் குழுமத்தின் சார்பாக வெளிவருகிற இதழ்கள் அவதூறு பிரச்சாரத்தின் அடிப்படையில் கட்டுரைகளை புனைந்து எழுதி குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

குமுதம் வார இதழில் இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களை கொச்சைபடுத்தி, இழிவுப்படுத்துகிற வகையில் கேலிச் சித்திரம் (கார்ட்டூன்) வெளியிட்டிருப்பதை எதிர்த்து வன்மையாகக் கண்டனத்தைப் பதிவு செய்தோம். இந்தக் கேலிச்சித்திரத்தின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற திரு. ராகுல்காந்தி அவர்களை தரக்குறைவான வகையில் இழிவுப்படுத்துவதை எந்த காங்கிரஸ் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

இந்நிலையில் குமுதம் குழுமத்தைச் சார்ந்த இதழ்கள் இப்படி இழிவுபடுத்தி செய்தி வெளியிடுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இத்தகைய அவதூறு பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்துவிட முடியுமென்று திட்டம் தீட்டி வருகிறார்கள். இது வெறும் பகல் கனவாகத் தான் முடியப்போகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவராக விளங்குகிற ராகுல்காந்தி அவர்களை இழிவுபடுத்தி, கேலிச்சித்திரம் வரைந்த குமுதம் வார இதழுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்வதோடு, காங்கிரஸ் கட்சியின் கடமை முடிந்துவிட்டதாகக் கருதமுடியாது. 

இது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக அரசியல் பேராண்மையுடன் கருத்துக்களைப் பதிவு செய்கிற எதிர்கட்சித் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். காங்கிரஸ் தொண்டர்களின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை இந்த அநீதியை துடைத்தெறியாமல் ஓயமாட்டார்கள். 

இனி காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் குமுதம் குழும இதழ்களை புறக்கணிப்பதோடு அந்த இதழ்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் கேலிச்சித்திரம் மற்றும் அவதூறு கட்டுரைகளை வெளியிட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் வருகிற ஜுலை 11 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில் அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகள் சமூக ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு குமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார் கே.எஸ்.அழகிரி.