உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்! பிளான்க் செக் அனுப்பி உதவிக் கரம் நீட்டிய சக வீரர்!

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜேக்கப் மார்ட்டினுக்கு உதவ பிளான் செக் அனுப்பியுள்ளார் மற்றொரு கிரிக்கெட் வீரர்.


   குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின். வலதுகை பேட்ஸ்மேன் ஆன இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 1999ஆம் ஆண்டில் விளையாடியவர். முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோர் தலைமையில் 10 ஒருநாள் போட்டிகளை இவர் எதிர்கொண்டுள்ளார். 

   2008ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஜேக்கப் மார்ட்டின் பரோடா அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி சாலை விபத்து ஒன்றில் இவர் சிக்கினார். அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 

   உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் சிகிச்சைக்கான பணத்தை பெற முடியாமல் உறவினர்கள் திண்டாடி வந்தனர். 

   இந்த செய்தியை அறிந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஜேக்கப் மார்ட்டின் சிகிச்சைக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார்.   ஜேக்கப் மார்ட்டினும் தானும் ஒரே அணி வீரர்கள் என்றும் அவர் மிகவும் அமைதியானவர் என்றும் சவுரவ் கங்குலி நினைவுகூர்ந்துள்ளார்.

   ஜேக்கப் மார்ட்டின் விரைவில் குணமாக வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது குடும்பம் தனியானது அல்ல நாங்கள் அனைவரும் உடன் உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

   ஜேக்கப் மார்ட்டின் குடும்பத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதேபோல் பரோடா கிரிக்கெட் சங்கமும் மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இளம் வீரரான குருணல் பாண்டியா  மார்ட்டின் குடும்பத்துக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியுள்ளார். 

   ஒரு லட்சத்திற்கு குறைவாக அல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுமாறு அவர் அன்பு கட்டளை இட்டுள்ளார். அதாவது பிளான்க் செக் அனுப்பி அவர் தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளார்.

   இதேபோல் நியூசிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உதவி செய்ய முன்வந்துள்ளார். இர்பான் பதான், ஜாகிர் கான், முனாஃப் படேல், யூசுப் பதான் ஆகிய வீரர்களும் ஜேக்கப் மார்ட்டின் குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய உள்ளனர்.