துரத்திய ஏழ்மை! உதவிக்கரம் நீட்டிய போலீஸ்! பழங்குடியினத்தின் முதல் டாக்டரான ஜோஷ்னா..! நெகிழ வைக்கும் நிகழ்வு!

திருவனந்தபுரம்: கேரள பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் மருத்துவர் என்ற சாதனையை ஒரு பெண் படைத்துள்ளார்.


கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோஸ்னா. பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் இருந்து, ஆயுர்வேத மருத்துவர் படிப்பை படிக்க, ஜோஸ்னா முயற்சித்தார். ஜோஸ்னாவின் தந்தை சிறு வயதிலேயே அவர்களை விட்டுச் சென்றுவிட்டார். தனியாளாக, ஜோஸ்னாவின் தாய் கூலி வேலை பார்த்து, மகளின் படிப்பிற்கு உதவி வந்துள்ளா. கடுமையான குடும்ப கஷ்டத்திற்கு இடையே போராடி பள்ளி படிப்பை முடித்த ஜோஸ்னாவுக்கு, உதவிக்கரம் அரசாங்கம் வழியாக கிடைத்துள்ளது.  

ஆம், ஜோஸ்னா பள்ளி படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்பாக, மருத்துவம் படிக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் கிராமத்தில் போலீசார் தன்னம்பிக்கை பயிற்சி திட்டம் ஒன்றை நடத்தினர். அதில் பங்கேற்ற ஜோஸ்னாவின் விருப்பத்தைக் கேட்டறிந்த போலீஸ் அதிகாரிகள், இதன்பேரில், அவருக்கு ஆயுர்வேத மருத்துவ படிப்பில் சீட் கிடைக்க உதவினர். உரிய முறையில் 2014ம் ஆண்டு ஜோஸ்னாவிற்கு சீட் கிடைத்தது. முழு மூச்சாக படித்து, தற்போது மருத்துவ பட்டமும் பெற்றுள்ளார். அவரது கிராமத்தில் முதல் ஆயுர்வேத டாக்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.  

உரிய நேரத்தில் உதவி செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தனக்கு பக்கபலமாக இருந்த குடும்பத்தினரின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், சுற்றுப்புற குழந்தைகளுக்கு உயர்கல்வி கிடைக்க போதுமான உதவிகள் செய்துதருவேன் என்று, ஜோஸ்னா குறிப்பிடுகிறார்.