கல்லூரியில் ரேகிங் கொடுமை! சிலம்பாட்ட சாம்பியன் மாணவி எடுத்த விபரீத முடிவு!

கல்லூரி ஹாஸ்டலில் சக மாணவிகள் செய்த ரேகிங் கொடுமையால் மாநில அளவில் சிலம்ப போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நெல்லை மாவட்டம் சிப்பிபாறை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தந்தை கூலித் தொழிலாளியாக இருந்தாலும் திவ்யாவுக்கு விளையாட்டு மீது தீராத காதல்.

 

அதுவும் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பத்தில் திவ்யா செம கில்லி. திவ்யா சிலம்பம் சுத்தும் வேகத்திற்கு ஆண்களால் கூட ஈடுகொடுக்க முடியாது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிலம்ப வித்தையை காட்டி திவ்யா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பயின்று வந்தார். அங்குள்ள ஹாஸ்டலில் தங்கி திவ்யா படித்து வந்துள்ளார். திவ்யாவின் திறமை மீது அங்குள்ள சில மாணவிகளுக்கு பொறாமை இருந்துள்ளது.

 

இதனால் அந்த மாணவிகள் திவ்யாவை ரேகிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரேகிங் அதிகமாகவே திவ்யா தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து திவ்யாவின் தந்தை கல்லூரி வந்து புகார் அளித்துவிட்டு சென்றார்.

 

புகார் அளித்த பிறகும் சக மாணவிகள் ஹாஸ்டலில் வைத்து திவ்யாவை ரேகிங் செய்து அவமானப்படுத்தியுள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த திவ்யா ஒருகட்டத்தில் மனம் உடைந்துள்ளார். மேலும் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

ரேகிங் கொடுமையால் மாநில அளவில் சிலம்பத்தில் தங்கம் வென்ற திவ்யா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் கல்லூரியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக ரேகிங் என்று புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக கூறப்படுகிறது.