மீண்டும் பட்டையக் கிளப்பும் கோவன் பாடல்கள்! கைது செய்யப்படுவாரா?

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாட்டு பாடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கோவன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அவர் மீண்டும் சிறப்பான பாடல்களை இயற்றி அசர வைத்துள்ளார்.


ரசிய சோசலிச் புரட்சியின் 102-ம் ஆண்டை ஒட்டி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்த இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் மக்கள் கலை இலக்கியத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் லதா.

‘மூணு ரூபா பார்லே ஜி வாங்க முடியல.. முப்பது ரூபா பனியன் ஜட்டி போணி ஆகல;’ என்று பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது கோவனின் பாடல். அதே போன்று, “எழில்மிகு காஷ்மீரிலே என்ன நடக்குது தெரியல ... மண்ணின் சொர்க்கமே இருண்டு கெடக்கு.. மர்மம் விலகல ...” - காஷ்மீர் மக்கள் வாழ்வின் சோகத்தை பாடலாக வெளிப்படுத்துகிறார் தோழர் லதா.

“இரும்பு குழம்பாகி பாய்லரிலே கொதித்திடும் .. கை உரையும் தாண்டி சூடு விரலெல்லாம் வெந்திடும் ...” தொழிலாளர்களின் வேலைநிலை அவலத்தை பாடலால் விவரிக்கிறார் தோழர் கோவன். கேட்டுப் பாருங்கள், பிடித்துப் போகும்.

டாஸ்மாக் பற்றி பாடியதற்கே கைது செய்யப்பட்டார் கோவன். இன்றைய பொருளாதார மந்த நிலையை புட்டுவைத்திருக்கும் கோவனை விட்டு வைக்குமா அரசு?