கோவை மக்களை கவர்ந்த சூரியன் FM பர்னபாஸ்! 22 வயதில் இறைவனடி சேர்ந்த பரிதாபம்!

ஆறுநாள்களுக்கு முன், அலுவலகத்தில் இருக்கும் போது ’தலை வலிக்கிறது’ என்றபடி லேசாக சாய்ந்திருக்கிறான்.


அடுத்த கட்ட நடவடிக்கையாக உடனிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். ஸ்கேன் செய்ததில் மூளையில் பரு அளவில் கட்டி என்று தெரிய மூன்றுநாள் இடைவிடாத சிகிச்சை போயிருக்கிறது ! ’பர்ன பாஸ் விரைந்து குணம் பெற வேண்டும்’ என்ற வேண்டுதல் ஹேஸ்டேக்குகள் ஒரு பக்கம் நட்புகளால் வைரலாகிக் கொண்டிருந்தது.

சென்னையில் அரசு மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை மேற்கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியைக் கேட்டு அவரும் இசைவு தர... கோவையில் இருந்து பர்னபாஸை சென்னைக்குக் கொண்டு வந்து அந்த சிகிச்சையும் மூன்றுநாள்கள் வரை போயிருக்கிறது... நேற்று கோமா நிலைக்குப் போன பர்னபாஸ், பின்னர் உடல் சக்தியை முழுதும் இழந்து நாடித் துடிப்பையும் படிப் படியாக இழக்க ஆரம்பித்தான்... இன்று அதிகாலை பிறந்த நான்காவது நிமிடம், 12.04 -க்கு பர்னபாஸ் இறப்பை உறுதி செய்தனர் மருத்துவர்கள் !

நண்பர், பத்திரிகையாளர் பிரவீன்பிலிப் இல்ல விழாக்களில் குட்டியூண்டு பையனாக வளைய வந்தவன் பர்னபாஸ் ! பிரவீன் பிலிப்பின் அக்காள் மகன். சென்னை லொயோலோ கல்லூரியில் விஸ்காம் முடித்தவன். கடந்த மே, மாதம்தான் 22 வயதைத் தொட்டான். ’சூரியன் எஃப் எம்’ -ம்மில் ’ஹிட்’ டும் ’ஹீட்டு’ மான நிகழ்ச்சித் தொகுப்பாளன், வர்ணனையாளன், அனைவருக்கும் பிடித்தமான ஒருவன் என அழகாய் வளர ஆரம்பித்த செடி!

அடுத்த சில மணி நேரம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது... சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் (Anthony Barnabas RJ suriyan fm s/o of Williams) பர்னபாஸ் அடக்கம் செய்யப் பட்டு விடுவான் ! காற்றில் கலந்து பரந்திருக்கும் அவன் வர்ணனைக் குரல் அவனை நேசித்த அனைவர் நெஞ்சிலும் ஊசி போல் தைத்துக் கொண்டேதான் இருக்கும்... நண்பர் பிரவீன்பிலிப், “வேக, வேகமாக அசுரத்தனத்தில் புகழேணியை எட்டிப் பிடித்த எங்கள் குழந்தையை இழந்து விட்டோமோ” என்று கலங்கிக் கதறியது இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது !

(RJ Bas என்ற முகநூல் கணக்கில் இன்னும் பேசிக் கொண்டேதான் இருக்கிறான் பர்னபாஸ்)