மகள் திருமணத்தில் கச்சேரி! பாட்டு பாடியபடியே மயங்கி சரிந்து மரணித்த தந்தை! பின்னர் அரங்கேறிய நெகிழ்ச்சி!

கேரள மாநிலத்தில் மகளின் திருமண விழா இசைக் கச்சேரியில் உற்சாகமாக பாடிய உதவி ஆய்வாளர், மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவத்தை மணமகளிடம் மறைத்து உறவினர்கள் திருமணத்தை நடத்தினர்.


கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் 55 வயதான விஷ்ணுபிரசாத். திருவனந்தபுரத்தை அடுத்த கரமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய பிள்ளைகளில் இருவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் 3-வது மகளான ஆர்ச்சாவின் திருமண ஏற்பாடுகளை செலவு குறித்து கவலைப்படாமல் ஆடம்பரமாகச் செய்திருந்தார். 

திருமணத்துக்கு முதல் நாள் இசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஷ்ணு பிரசாத் நன்றாகப் பாடுவார் என்பதால் அவரையும் பாடுமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அமரம்' படத்தில் மகளுக்காக, தந்தை மம்முட்டி பாடிய பாடலான 'ராக்கிளி பொன்மகளே' என்ற பாடலை விஷ்ணுபிரசாத்  மைக்கைப் பிடித்து உற்சாகமாக பாடத் தொடங்கினார்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் மேடையில் மயங்கி சரிந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விஷ்ணு பிரசாத் மயங்கி விழுந்து இறந்த நேரத்தில் மணமகள் ஆர்ச்சா அங்கு இல்லாததால் அசம்பாவிதம் அவருக்குத் தெரியவில்லை 

மறுநாள் திருமணம் என்ற நிலையில் தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவித்தால், அவரால் துக்கத்தை தாங்க இயலாமல் விஷ்ணுபிரசாத்  ஆசை, ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதால், தெரிவிக்காமல் மறைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை திருமண நாளன்றும் தந்தையை கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டிருந்த மகளிடம் அவர் வெளியே சென்றிருப்பதாகவும் வந்துவிடுவார் என்றும் கூறி ஆர்ச்சாவை சமாதானம் செய்த மணமகனும், உறவினர்களும் ஒருவைழியாக திருமணத்தை முடித்தனர். 

மணமகன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆர்ச்சாவுக்கு திங்கள் கிழமை காலையில் தான் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தனக்கு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து கொடுத்த தந்தை, திருமணத்தை காணும் முன்பே மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஆர்ச்சா கதறி அழுதது அனைவரையும் உருக்கமடையச் செய்தது.