தமிழகம் எப்படி நம்பர் ஒன் ஆனது? விளக்கம் அளிக்கிறார் கொளத்தூர் மணி!

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வுசெய்து, அதற்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவம் செய்திருக்கிறது. ஆனால், இது எப்படி சாத்தியமானது என்பதுதான் ஆச்சர்யம்.


ஏனென்றால், தொழில்துறை, வேலைவாய்ப்பு போன்றவை மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால், கல்வி, மருத்துவத்தில் மட்டும் முன்னேறியுள்ளதை வைத்து முதலிடம் பிடித்துள்ளது என்று ஒரு கருத்து உலவுகிறது. அதுதான் உண்மை என்பது போல் பேசுகிறார் கொளத்தூர் மணி.

தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, சிறப்பான பொதுவினியோகம், நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் அதிகம் என்று பல பிரிவுகளிலும் நற்பெயர் பெற்றிருக்கிறது தமிழ்நாடு. ஆனால் இவை எல்லாம் ஓராண்டில் ஏற்பட்ட வளர்ச்சியோ, பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களோ அல்ல என்கிறார். 

அதாவது எடப்பாடியாருக்கு முன்பாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்கள் உருவாக்கிய மாற்றம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் புளுகிக்கொண்டிருக்கிறார்களே, அந்த திராவிட இயக்கம் தந்த சமூக விழிப்புணர்வாலும், திட்டங்களாலும் ஏற்பட்ட வளர்ச்சிகள்தான் இவை. 

'இந்தியாவில், தற்போது 25.2 ஆக இருக்கிற உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை 2035க்குள் 50 சதவிகிதமாக உயர்த்துவோம்' என்று தேசிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால், இப்போதே தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் 49 விழுக்காடாக இருக்கிறது. இன்னும் 16 ஆண்டுகள் கழித்து அவர்கள் அடையத் திட்டமிட்டுள்ள இலக்கை, தமிழ்நாடு இப்போதே அடைந்துவிட்டது. அதேநேரத்தில் அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டியவை என்று கூறியிருக்கிறார். 

மத்திய அரசுக்கு யார் அதிக ஜால்ரா போட்டது என்பதை வைத்து, இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒருசிலர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கொடுக்க முடியுமா என்ன?