குழந்தை அழும்போது கண்ணீர் வருமா - குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர் - குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும்

முதன்முதலில் தாயாகும் பெண்ணுக்கு, குழந்தை வளரும் வரையிலும் தினம் ஒரு சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். குழந்தையிடம் தென்படும் சின்னச்சின்ன மாற்றங்களுக்கும், காரணம் தெரியாமல் பயந்து நடுங்குவாள் இளம் தாய்.

·         பச்சிளம் குழந்தைகள் அழும்போது கண்ணீர் வருவதில்லை. கண்ணில் குறை இருப்பதால்தான் கண்ணீர் வரவில்லையோ என்று தாய் சந்தேகப்படுவாள்.

·         பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை என்பதால் அழும்போது கண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

·         குழந்தைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் உருவாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம், அதன்பின்னரே அழும்போது கண்ணீர் வரும்.

·         பச்சிளங் குழந்தைக்கு நிறங்கள் தெரியாது. பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்தான் ஆரம்ப காலங்களில் தெரியும்.

இதுபோன்ற குறைகள் எல்லாமே கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் தானாகவே சரியாகிவிடும் என்றாலும், மனதில் ஏதேனும் சந்தேகம் தோன்றும்போது மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது.

  குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர்

கர்ப்பிணியின் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கும், கர்ப்பப்பைக்கும் இடையில் ஒரு நீர்ப்படலம் ஜவ்வு போன்ற பையில் நிறைந்திருக்கும். இந்த நீரை பனிக்குட நீர் என்று சொல்வார்கள்.

·         குழந்தையின் சுவாசத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் பனிக்குட நீர் சரியான அளவில் இருக்கவேண்டியது அவசியம்.

·         பனிக்குட நீர் குறைவாக இருப்பதும், அதிகமாக இருப்பதும் குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

·         பனிக்குட நீர் குறைவதால் குழந்தையின் கிட்னி வளர்ச்சி பாதிப்படைவதற்கு வாய்ப்பு உண்டு.

·         பிரசவ தேதியை தாண்டும்போதும், தாய்க்கு நோய்த்தொற்று ஏற்படும்போதும் பனிக்குட நீர் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

குழந்தை சுற்றிவருவதற்கும், பிரசவம் எளிதாக நடைபெறவும் பனிக்குட நீர் அவசியம். அதனால் பனிக்குட நீர் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்வது குழந்தைக்கு நல்லது.


 குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும்?

கருவில் இருக்கும் சிசுவின் தலைமுடி மற்றும் பச்சிளங்குழந்தையின் தலைமுடி குறித்து ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் உலவுகின்றன. இதுகுறித்த விளக்கங்களை மருத்துவரிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.

·         வயிற்றுக்குள் சிசுவிற்கு தலைமுடி நிறைய இருந்தால், தாய்க்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் என்று சொல்வார்கள்.

·         நிறைய தலைமுடியுடன் குழந்தை பிறந்தால், தாய்க்கு விரைவில் தலைமுடி உதிர்ந்துவிடும் என்று சொல்வார்கள்.

·         பிறக்கும்போது குழந்தைக்கு இருக்கும் மென்மையான முடி விரைவில் உதிர்ந்துவிட்டால், சின்ன வயதிலேயே வழுக்கை ஏற்படும் என்பார்கள்.

·         தலையில் முடியே இல்லாமல் குழந்தை பிறப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்பார்கள்.

இவை எல்லாமே மூட நம்பிக்கைதான். பிறக்கும்போது நிறைய தலைமுடியுடன் பிறப்பது அல்லது வழுக்கையாக பிறப்பது இரண்டுமே இயல்புதான். அதனால் தலைமுடி குறித்து எந்தக் கவலையும் தேவையில்லை.