கிட்னி திருட்டு கும்பல்..! சாதுக்களை துடிக்க துடிக்க அடித்தே கொன்ற பயங்கரம்! நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் பின்னணி!

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி.. ஒரு பக்கம் விவசாயத்தால் மற்றவர்களின் பசியை தீர்க்கும் கிராமங்கள் இன்னொரு பக்கம் சாதி வெறிகளையும் மூடநம்பிக்கைகளையும் சுமந்தபடியேதான் உள்ளன.


இந்த கொடூரத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட பயங்கரம். மகராஷ்ட்ரா மாநிலத்தில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பல்ஹார் மாவட்டத்தின் கட்ஜின்சலே கிராமம். 

சில தினங்களுக்கு முன்பு, இந்த கிராமம் வழியாக காரில் 35 மற்றும் 70 வயதுடைய இரண்டு இந்து சாதுக்கள் கடக்க முயன்றுள்ளனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டிவந்தார்.

கிட்னி திருடும் கும்பல் மாறுவேடத்தில் உலாவருகிறது என்ற வதந்தி கிராமத்தில் பரவியிருந்த நிலையில்தான் சாதுக்கள் அந்த வழியே கடக்கும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் புதிய முகங்களான சாதுக்களை கண்ட கிராமத்தினர், உடனே தாக்க ஆரம்பித்துள்ளனர். சாதுக்கள் எவ்வளவோ விளக்கியும் ஒருவரும் கேட்கத்தயாராக இல்லை.

இரும்புத்தடி, உருட்டுக்கட்டை, கற்கள் என எவ்வளவு ஆயுதங்களை கொண்டு தாக்கமுடியுமோ அவ்வளவு ஆயுதங்களை வைத்து ஆளாளுக்கு சாதுக்களை துடிக்க துடிக்க அடித்துள்ளனர். இருவரையும் காப்பாற்ற முற்பட்ட கார் டிரைவரையும் கிராமத்தினர் விடவில்லை.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் சிக்கிய சாதுக்களும், கார் டிரைவரும் கொஞ்சநேரத்தில் ரத்தவெள்ளத்தில் பிணமானார்கள்.. இதைவிட அதிர்ச்சியான விஷயம் ஒன்றும் இருக்கிறது. சாதுக்களை காப்பாற்ற போலீசும் அங்கே விரைந்திருக்கிறது. போலீசாராலேயும் அந்த கிராமத்து காட்டுமிராண்டி கும்பலை ஒன்றும் செய்யமுடியவில்லை.

அவர்கள் கண்ணெதிரிலேயே சாதுக்கள் மற்றும் டிரைவரை கிராமத்தினர் கொன்று போட்டுவிட்டனர். போலீசாரையும் தாக்கிய காட்டுமிராண்டி கும்பல் அவர்களின் வாகனத்தையும் விட்டுவைக்கவில்லை. நாசம் செய்துவிட்டன.

நாட்டையே அதிர வைத்துள்ள இந்த பயங்கரம், மதச்சாயம் பூசப்பட்டுவிடக்கூடாதே என்று பதறுகிறது, சிவசேனா கூட்டணியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு. கடுமையான நடவடிக்கை எடுக்காமல் ஓயமாட்டேன் என்று, சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவிடம் உறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, 

சம்பவ இடத்தில் படம் பிடிக்கப்பட்ட செல்போன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு குற்றவாளியும் தப்பவே முடியாது என்பதற்கு வீடியோ அடையாளங்கள் பெரிதும் உதவலாம். இப்போதைக்கு கட்ஜின்சலே கிராமத்தை சேர்ந்த 9 சிறார் உட்பட மொத்தம் 110 பேரை கைது செய்திருக்கிறது மகராஷ்டிரா காவல்துறை.. 

ஒட்டுமொத்தமா போட்டு குழப்பிக்கொள்ளாமல், தனித்தனியாக திட்டமிட்டவர்கள், முக்கிய குற்றவாளிகள் ,உடந்தையாளர்கள் என புலனாய்வில் போலீசார் வகுத்து வழக்கை நடத்தினால், கண்டிப்பாக பலர் தூக்குமேடை ஏறுவார்கள்.

ஒரு பக்கம் கண்ணுக்கே தெரியாமல் உலகமெங்கும் மனித உயிர்களை குடித்துவரும் கொரோனா வைரஸ். இன்னொரு பக்கம் கண்கள் மூளை எல்லாம் இருந்தும், சாதுக்களை அடித்துக்கொல்லும் காட்டுமிராண்டிகள்..

மிருக ஜாதியில்கூட பொழுதுபோக்கிற்காகவோ, வீணாகவோ வேட்டைகள் நடப்பதில்லை பசித்த நேரத்தில் இரைக்காக மட்டுமே நடக்கும். ஆனால் மனித ஜாதியில்தான் எதற்காக செய்கிறோம், என்ன செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல் கொடூரங்கள் காலம் காலமாய் நடந்துவருகின்றன.

நன்றி: ஏழுமலை வெங்கடேசன்