கிழவியைத் தூக்கி மனையில் வை கதையாக நடப்பதா? - கி.வீரமணி காட்டம்!

கரோனாவை எதிர்கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்குக் கட்சிகளை மறந்து ஒட்டுமொத்தமாக மக்கள் ஆதரவு தெரிவித்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணத்தை ஒளிபரப்புவது உகந்ததல்ல - இது மக்களை வேறு திசைக்கு இழுத்துச் செல்லக்கூடியது என தி.க. தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.


அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள அவர், ”இப்பொழுது ஏற்பட்டுள்ள ஒற்றுமையைச் சிதற அடிக்கக் கூடியது என்பதால், இந்த முயற்சியை அரசு கைவிடவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த அறிக்கை விவரம்: “ நாடு முழுவதும் முழு அடைப்பு உள்ள நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இன்றுமுதல் அரசு தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கட்சிகளுக்கும், மதங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் பொதுமக்கள், தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், மத்திய அரசு - அரசுத் தொலைக்காட்சியில் இராமாயணத்தை மீண்டும் ஒளிபரப்புவது தேவையற்ற ஒன்று. மத்திய அரசின் இந்து மதக் கண்ணோட்ட இத்தகைய நடவடிக்கைகள்மீது கடும் விமர்சனங்கள் வெடித்து எழும் ஒரு நிலையை ஏற்படுத்துவது நல்லதல்ல - உகந்ததல்ல!

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்யப்படுத்துவது என்று வரலாற்று ஆசிரியர்கள் - இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்த விவேகானந்தர் போன்றவர்கள் சொல்லியிருப்பது உலகம் அறிந்த ஒன்றே!

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு இதிகாசத்தை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது சட்டப்படியும் குற்றமேயாகும்.                                

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல, இராமாயணத்தை அவசர அவசரமாக ஒளிபரப்புவதா? ஒரு பக்கத்தில் இராமன் கோவில் கட்டும் பணி தீவிரம் - இன்னொரு பக்கத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயண ஒளிரப்பு என்றால், இது ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அஜெண்டாதானே!

எல்லோரும் ஒன்றிணைந்து கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அதனைச் சிதற அடிக்கும் வகையில், மக்கள் வேறு பக்கம் நின்று அரசை எதிர்க்கும் நிலையை உருவாக்குவது மத்திய அரசுக்கு நல்லதல்ல! இதற்கான முழு பொறுப்பை மத்திய பா.ஜ.க. அரசே ஏற்கவேண்டி வரும்.” என்று கி.வீரமணி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.