சிந்து சமவெளி நாகரிகத்தைத் திரித்துச்சொல்வதா? ஒண்ணாம் நம்பர் விசமம் என கி.வீரமணி காட்டம்

வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட, திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் திரிபுவாதம் செய்திருப்பது - ஒண்ணாம் நம்பர் விஷமம் என்றும் இத்தகைய பொய்யும் புரட்டும் நீடிக்காது, நிலைக்காது; அம்பலமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சிந்து சமவெளி நாகரிகம் என்பது பழைமைவாய்ந்த திராவிட(ர்) நாகரிகம் ஆகும். திராவிட மொழிகளில் மூத்த முன்னோடி மொழி தமிழ்மொழி. இதை, அகழ்வாராய்ச்சி மூலம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய பழைய நகரங்களைத் தோண்டியெடுத்த ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் ஆட்சிக்கால தொல்லியல் ஆய்வு அதிகாரிகளான சர். ஜான் மார்ஷல், ஃபாதர் ஹிராஸ் ஆகியோரும், மேலும் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தினர்.

சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களது வேதத்தின் பல சுலோகங்கள் இந்தத் தத்துவார்த்த கருத்துக்களையே கொண்டது என்றும் மேல்நாட்டு அறிஞர்கள் முதல் நம் நாட்டு வரலாற்றாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.” என்று வீரமணி தெரிவித்துள்ளார். 

திராவிடர்கள் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரந்து இருந்தவர்கள்; தமிழ்மொழி அக்காலத்தில் பேசப்பட்டது; நாகர்கள் தமிழ் மொழி பேசிய திராவிடர்கள் என்ற கருத்துக்களை அம்பேத்கர் தன் நூலில் எழுதியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ”வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி இதில் மும்முரமாக ஈடுபட்டு மொஹஞ்சதாரோ (“திராவிட”) காளை மாட்டுச் சின்னத்தை - முத்திரையை (ஆரிய) குதிரையாக மற்றியது அப்போதே அம்பலமாகியது. அன்று முதலே தங்கள் கைவசம் உள்ள ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, இல்லாத ஆறாகிய (கற்பனை) சரஸ்வதி நாகரிகம் என்று ஒன்றை இட்டுக்கட்டி, அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய சிலரைத் தயாரித்து எழுதவைத்து வருகிறார்கள். 

பி.பி. லால் என்பவர் மூலம் தொடங்கிவைத்தனர். எஸ்.பி. குப்தா என்பவரைவிட்டு ‘சிந்துசமவெளி நாகரிகம்’ என்ற பெயரைக்கூட மாற்றி திரிபுசெய்து பார்த்தனர். சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று மாற்றி திராவிட நாகரிகம் என்பதையே மறைத்து, அழித்து ஒழித்துவிட வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

இதைத் தலைகீழாக்கிட நேற்று (1.2.2020) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது பட்ஜெட் உரையில், சரஸ்வதி நாகரிகம் என்ற ஆர்.எஸ்.எஸ். கரடியை உள்ளே திணித்து, அதிகாரப் பூர்வமாகப் பதிவுசெய்திருப்பது ஒண்ணாம் நம்பர் விஷமம்! திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் குரலை அங்கே ஒலித்துள்ளது - வன்மையான கண்டனத்திற்குரியது. நம்முடைய தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. 

“சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது” என்பது போன்ற மோசடி வித்தை, இது. வரலாற்றை மாற்றுவது, திரிபுவாதத்திற்கு ஆளாக்குவது, என்பதில் இவர்கள் தலைகுப்புற நின்று (சிரசாசனம்) போட்டாலும் இளைய தலைமுறையையோ, இனிவரும் தலைமுறையையோ இக்கூட்டம் ஒருபோதும் ஏமாற்ற முடியாது” என்று வீரமணி ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.