திருச்சூர்: கொலையாளி ஜோலி உடன் புகைப்படத்தில் இருக்கும் ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
6 கொலை ஜோலி ஜோசப்புடன் நெருக்கமாக இருக்கும் பெண் தோழி யார்? வலை வீசும் போலீஸ்! அடுத்தடுத்து திருப்பம்!
கேரள மாநிலம், கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 12 ஆண்டுகளில் மர்மமான முறையில் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இதன் பின்னணியை விசாரித்தபோது, அனைவருக்கும் சயனைடு கலந்து கொடுத்து, அந்த குடும்பத்தின் முன்னாள் மருமகள் ஒருவரே இந்த விசயத்தை செய்ததாக தெரியவந்தது.
இதையடுத்து, ஜோலி ஜோசப் என்ற 47 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். தன்னை விவாகரத்து செய்ததற்காக, முன்னாள் கணவர் ரிஜூ ஜோசப் குடும்பத்தினரை பழிவாங்க இதனைச் செய்ததாக, அவர் கூறியுள்ளார். சினிமா பாணியில் அமைந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜோலி ஜோசப் கடந்த 14 ஆண்டுகளாக கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் பேராசிரியை வேலை செய்துவருவதாக, எல்லோரிடமும் கூறி நடித்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அவரது செல்ஃபோன் தொடர்புகளை ஆய்வுசெய்தபோது, ராணி என்ற பெண்ணிடம் அடிக்கடி ஜோலி ஜோசப் தொடர்புகொண்டு பேசியது தெரியவந்துள்ளது. அந்த பெண், என்ஐடி வளாகத்தை ஒட்டி டெய்லர் கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் சில மாதங்களாக, அந்த கடை மூடியுள்ளது, அந்த பெண்ணையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
அத்துடன் ஜோலியின் புகைப்படங்கள் பலவற்றில் ராணியும் உடன் உள்ளார். அவ்வளவு நெருக்கமான தோழியாகக் கருதப்படும் ராணி தற்போது எங்கே சென்றார் என போலீசார் பலமுறை கேட்டும் ஜோலி பதில் அளிக்க மறுத்துவிட்டாராம். எனவே, ராணிக்கும், ஜோலிக்கும் என்ன உறவு, ராணி என்ன ஆனார், அவரையும் ஒருவேளை ஜோலி கொன்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர தேடல் நடத்தி வருகின்றனர்.
மொத்தத்தில், ஜோலி ஜோசப் என்றால் கேரள சேட்டன்கள் நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கொலையாளியாக அவர் மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல...