ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் பஞ்சத்தால் திண்டாடி வரும் நிலையில் சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீரை கேரளா கொடுக்க முன்வந்த நிலையில் அதனை வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
20 லட்சம் லிட்டர் குடிநீர்! கொடுக்க முன்வந்த கேரளா! வாங்க மறுத்த எடப்பாடி! அதிரவைக்கும் ரிப்போர்ட்!
தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது. எதிர்பார்த்த மழைப்பொழிவு தமிழகத்தில் இல்லை. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு ஒரு குடம் தண்ணீருக்கு மக்கள் நாயாக அலையும் நிலை உள்ளது. அதிலும் சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எவ்வளவு பணம் கொடுக்க முன் வந்தாலும் தண்ணீர் இல்லை என்கிற பதிலே தண்ணீர் நிறுவனங்களிடமிருந்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து ஊடகங்களில் அதிக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் அலுவலகத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்கிற தகவலை அறிந்து உதவி செய்ய கேரள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலமாக அனுப்பி வைக்க கேரளா தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் கேரளாவில் இருந்து தண்ணீர் பெற வேண்டிய சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்தில் இருந்து கேரளாவிற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்று பேசியுள்ளார் கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை உணர்ந்து ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் என்ன காரணம் என்றே தெரியாமல் அந்த தண்ணீரை வாங்க தமிழகம் மறுத்துவிட்டதாகவும் தற்போதைக்கு தங்களுக்கு தண்ணீர் தேவையில்லை என்று கூறிவிட்டதாகவும் கேரள அதிகாரிகள் கூறுகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க முன்வந்தும் அதனை வேண்டாம் என்று தமிழகம் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.